Published : 05 Sep 2024 12:42 PM
Last Updated : 05 Sep 2024 12:42 PM
சென்னை: வேளச்சேரியில் 50 அடி பள்ளத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில், மேற்குவங்க தொழிலாளியின் மண்டை ஓடு 9 மாதங்களுக்கு பின் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, வேளச்சேரியில் 2023 டிசம்பர் 4-ம் தேதி கியாஸ் பங்க் அருகே ஐந்து பர்லாங்க் சாலை சந்திப்பில் கட்டுமான பணிகளுக்காக தோண்டப்பட்ட 50 அடி பள்ளத்தில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
அந்தக் கட்டிடத்திற்குள் 10-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியானது. தகவல் அறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 10 பேரை மீட்டனர். அதேசமயம் 50 அடி கட்டுமான பள்ளத்தில் வெள்ளம் புகுந்து சகதியில் சிக்கிக் கொண்ட நரேஷ் மற்றும் ஜெயசீலன் ஆகியோரை 100 மணி நேர போராட்டத்திற்கு பின் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சடலமாக மீட்டனர்.
அதேபோல், கட்டுமானப் பணி நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராகுல் பக்டி, தீபக் பக்டி ஆகியோரில் ராகுல் பக்டி பொதுமக்களால் மீட்கப்பட்டார். தீபக் பக்டி என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்தது. இது தொடர்பாக கிண்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அந்த இடத்தில் தற்போது கட்டுமான பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதற்கான பணியில் இருந்த பாதுகாப்பு இன்ஜினியர் வீரன், மெஷின் ஆபரேட்டர் சுரேஷ் ஆகிய இருவரும் கட்டுமான பணி நடைபெறும் இடத்தின் அடித்தள பகுதியில் பார்த்துக் கொண்டிருந்தபோது எலும்பு, மண்டை ஓடு இருந்துள்ளது.
தகவல் அறிந்து அங்கு வந்த கிண்டி போலீஸார், அங்கிருந்த எலும்புகளை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சோதனைக்காக அனுப்பி வைத்தனர். “அது கட்டிட விபத்தில் மாயமான தீபக் பக்டியின் எலும்புக் கூடாக இருக்கலாம்” என தெரிவித்த போலீஸார், “எனினும் மருத்துவ சோதனைகள் முடிந்து மருத்துவர்கள் முறைப்படி தெரிவிப்பார்கள்” எனக் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT