Published : 05 Sep 2024 04:44 AM
Last Updated : 05 Sep 2024 04:44 AM

14 கடலோர மாவட்டங்களில் ‘சாகர் கவச்’ என்ற பெயரில் 10 ஆயிரம் போலீஸார், வீரர்கள் 36 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை

தமிழக கடலோர மாவட்டங்களில் ‘சாகர் கவச்’ எனும் 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை நேற்று தொடங்கியது. சென்னை மெரினா கலங்கரை விளக்கம் மேலிருந்து தொலை நோக்கி மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: தமிழக கடலோர பகுதிகளில் ‘சாகர் கவச்’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடந்து வருகிறது. 14 கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர், போலீஸார் உட்பட 10 ஆயிரம் பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக புகுந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 175 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு, நாடு முழுவதும் கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, கடலோர மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு ஒரு முறை ‘சாகர் கவச்’ (கடல் கவசம்) என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு படையினர், காவல் துறையினர் இணைந்து நடத்தும் இந்த ஒத்திகை மூலம், கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 14கடலோர மாவட்டங்களில் 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை நேற்று தொடங்கியது.

துறைமுகம், மீன் சந்தை, கடலோரம் உள்ள வழிபாட்டு தலங்கள், பொழுதுபோக்கு மையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் தலைமைச் செயலகம், டிஜிபி அலுவலகம், காவல் ஆணையர் அலுவலகம், துறைமுகம், காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முக்கிய சாலைகள், சந்திப்புகளில் தீவிர வாகன தணிக்கை, சோதனை நடைபெற்றது.

சென்னை மெரினா கடற்கரை சாலையில் வாகன
சோதனையில் ஈடுபட்ட போலீஸார்.

தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, கடலோர காவல் படை, சட்டம் - ஒழுங்கு போலீஸார், குற்றப்பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் காலை 6 மணி முதல் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

ஒத்திகையின் ஒரு பகுதியாக, தீவிரவாதிபோல மாறுவேடமிட்டு கடல் வழியாக ஊடுருவிய காவலர்களை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் அடையாளம் கண்டு கைது செய்தனர். தொடர்ந்து 36 மணி நேரம் மேற்கொள்ளப்படும் இந்த ஒத்திகை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x