Published : 04 Sep 2024 06:42 PM
Last Updated : 04 Sep 2024 06:42 PM

தமிழக அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் டெக்னீஷியன்கள் பற்றாக்குறை - பிரச்சினை எங்கே?

மதுரை: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ‘டயாலிசிஸ்’ டெக்னீஷியன்கள் பற்றாக்குறை உள்ளதாகவும், புதிதாக 624 டயாலிசிஸ் டெக்னீஷியன்கள் நியமிக்க மருத்துவக் கல்வி இயக்குநரகம் கேட்டுக் கொண்டும் சுகாதாரத் துறை இன்னும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் சிறுநீரகப் பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், தேசிய அளவில் சிறுநீரக நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், செயலிழந்தவர்களுக்கும் ரத்தம் சுத்திகரிப்பு செய்வதற்கு ‘டயாலிசிஸ்’ சிகிச்சை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2,050 டயாலிசிஸ் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன.

இதில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டும் சுமார் 1,400-க்கும் மேற்பட்ட இயந்திரங்களும், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் சுமார் 600-க்கும் மேற்பட்ட இயந்திரங்களும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், போதுமான டயாலிசிஸ் டெக்னீஷியன்கள் இல்லாததால் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கிடைக்கப்பெறும் வருமானத்தை கொண்டு தற்காலிக பணியாளர்களை சொற்ப ஊதியத்தில் பணியமர்த்தப்படுவதாகவும், டெக்னீஷியன் படிக்கும் ‘இன்டன்ஷிப்’ மாணவர்களை கொண்டும் இந்த காலிப்பணியிடங்கள் சமாளிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலரும், மதுரை கே.கே.நகரை சேர்ந்த சமூக செயற்பாட்டாளருமான ஆனந்தராஜ் கூறுகையில், “மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (Ministry of health and family welfare) மற்றும் இந்திய சிறுநீரக மருத்துவ சங்கம்( Indian society of nephrology) பரிந்துரைப்படி மூன்று டயாலிசிஸ் சிகிச்சைபெறும் சிறுநீரக நோயாளிகளுக்கு ஒரு டெக்னீஷியன் பணியமர்த்தப்பட வேண்டும். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மொத்தம் 624 டெக்னீஷியன்களை நிரந்தரப்பணியாளர்களாக நியமிக்கப்பட வேண்டும்.

ஆனால், தற்போது தமிழகம் முழுவதும் 160 நிரந்தர டெக்னீஷியன்கள் மட்டுமே பணியில் உள்ளனர். அதனால், தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 624 நிரந்தர டயாலிசிஸ் டெக்னீஷியன்கள் பணியமர்த்தப்பட வேண்டும் என்று கோரி தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி இயக்குநரகம், மாநில சுகாதாரத்துறை செயலருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே கடிதம் அனுப்பி உள்ளது. இருப்பினும் இன்னும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது.

தற்போது நாளுக்கு நாள் டயாலிசிஸ் நோயாளிகளின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துவரும் நிலையில் அதற்கு ஏற்ப தகுதிவாய்ந்த நிரந்தர பணியாளர்களை பணி அமர்த்தாமல் இருப்பது நோயாளிகளின் சிகிச்சையில் பாதிப்பையும், சிகிச்சையின் தரத்தை குறைக்கவும் வாய்ப்புள்ளது. அதனால், டயாலிசிஸ் டெக்னீஷியன்கள் பற்றாகுறையை சமாளிக்க அரசு மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவகாப்பீட்டு திட்டத்தில் கிடைக்கபெறும் வருமானத்தை கொண்டு தற்காலிக பணியாளர்களை சொற்ப ஊதியத்தில் பணியமர்த்தியும், சிகிச்சையையளித்து வருகின்றனர்.

டயாலிசிஸ் டெக்னீஷியன்கள் பற்றாக்குறையால் புதிய நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சையை உடனடியாக வழங்காமல் காத்திருப்பு பட்டியலில் சேர்ப்பது அல்லது வேறு அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்வதும் அதிகரித்துள்ளது. இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுவதுடன் உடல் மற்றும் பொருளாதார ரீதியாக கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்,” என்றார்.

இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் (பொறுப்பு) டாக்டர் செல்வராணியிடம் கேட்டபோது, “மதுரை அரசு மருத்துவமனையில் 53 டயாலிசிஸ் இயந்திரங்கள் உள்ளன. 6 நிரந்தரப்பணியாளர்களும், 8 இன்சூரன்ஸ் பணியாளர்களும் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், 20 மாணவர்கள் டெக்னிஷியன் படிப்பு முடிக்கிறார்கள். மொத்தமுள்ள 3 ஆண்டுகளில் அவர்கள் கடைசி ஒரு ஆண்டு இன்டன்ஷிப் பணியாக டயாலிசிஸ் பணியை பார்க்கிறார்கள். சீனியர் டயாலிசிஸ் பணியாளர்கள் மேற்பார்வையில் நிரந்தரப் பணியாளர்கள், இன்சூரன்ஸ் பணியாளர்களுடன் இன்டன்ஷிப் மாணவர்களும் பணிபுரிவதால் போதுமான பணியாளர்கள் உள்ளனர்,” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x