Published : 04 Sep 2024 05:43 PM
Last Updated : 04 Sep 2024 05:43 PM
நாகர்கோவில்: மார்த்தாண்டம் மேம்பாலம் மற்றும் மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ள சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
தமிழக பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று குமரி மாவட்டம் மார்த்தாண்டம் உயர்மட்ட பாலத்தின் கீழ் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியது: "தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் வாயிலாக புதிதாக சாலைகள் அமைப்பது பழுதடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறோம். அத்துடன் மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் சாலைகளை உறுதிப்படுத்துவது, விரிவுப்படுத்துவது உள்ளிட்ட பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மார்த்தாண்டம் உயர்மட்ட இரும்பு மேம்பாலம் 2.4 கி.மீ நீளத்திற்கு ரூ.320 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் 07.05.2024 அன்று பாலத்தின் தூண்கள் 101-ற்கும் 102-க்கும் இடையில் உள்ள பாலத்தின் ஓடு தளத்தில் கம்பி தெரியும் அளவுக்கு பழுது ஏற்பட்டது. இதனை சரி செய்யும் பொருட்டு பொறியாளர் குழுவினர் நுண் நுட்ப கான்கீரிட் மூலம் 10.05.2024 அன்று தார் சாலை போடப்பட்டு அன்றே சாலை போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
இது தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையின் சாதனையாகும். மேலும், சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு வரும் சாலையில் 12 கி.மீட்டர் தூரம் வண்டி வாகனங்கள் செல்லுவதற்கு ஏதுவாக சாலையை சீரமைத்து தருமாறு அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள். அதனை விரைந்து சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், மார்த்தாண்டம் மேம்பாலம் மற்றும் மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ள சாலைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று அமைச்சர் கூறினார். இந்த ஆய்வின்போது அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, எம்எல்ஏ-க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், தாரகை கத்பர்ட், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT