Published : 04 Sep 2024 12:22 PM
Last Updated : 04 Sep 2024 12:22 PM

ஆசிரியர்கள் இல்லாமல் தடுமாறும் வகுப்பறைகள்; கல்வித்தரம் எவ்வாறு உயரும்? - அன்புமணி

அன்புமணி ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டில் ஒரு லட்சம் வகுப்பறைகள் ஆசிரியர்கள் இல்லாமல் தடுமாறும் போது கல்வித்தரம் எவ்வாறு உயரும்? ஆசிரியர்களை மதிக்காத எந்த சமூகமும் முன்னேற முடியாது என செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஏணியாகவும், தோணியாகவும் இருந்து உலக சமூகத்தை உயர்த்தவும், கரை சேர்க்கவும் உழைக்கும் ஆசிரியர்களை பெருமைப்படுத்துவதற்கான ஆசிரியர்கள் நாளைக் கொண்டாடும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகில் அனைவரின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் ஆத்மாக்கள் ஆசிரியர்கள் தான்; அதேபோல், மற்றவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்படாமல், மகிழ்ச்சியடையும் மகாத்மாக்களும் ஆசிரியர்கள் தான். அதனால் தான் அவர்கள் அனைவராலும் வணங்கப்படுபவர்களாக உள்ளனர்.

இத்தகைய சிறப்புமிக்க ஆசிரியர்களை இந்த சமுதாயம் போற்ற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் நாள் என்பதை ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே கொண்டாடும் நிலையை மாற்றி ஒட்டுமொத்த மக்களும் கொண்டாடும் நிலையை உருவாக்க வேண்டும். அது தான் நமது சமுதாயத்தை வளர்ப்பதற்காக உழைக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.

ஆனால், இன்று ஆசிரியர்களின் நிலையும், கல்வியின் தரமும் குறைந்து வருவது கவலையளிக்கும் உண்மை ஆகும். காலியாகி வரும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்படுவதே இல்லை. தமிழ்நாட்டில் ஏற்கெனவே குறைக்கப்பட்ட பணியிடங்கள் போக, மீதமுள்ள பணியிடங்கள் கூட முழுமையாக இன்னும் நிரப்பப்படவில்லை. நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் கூட அப்படியே காலியாகத் தான் கிடக்கின்றன. காரணம் கேட்டால், நிதி நெருக்கடி என்று ஒற்றை வரியில் கடந்து செல்கிறது தமிழக அரசு. உயிர் வாழ உயிர்வளி எவ்வளவு முக்கியமோ, அதை விட உயர்வுக்கு கல்வி முக்கியம். ஆனால், கல்வியின் முக்கியம் தமிழக அரசுக்கு தெரியவில்லை.

தமிழ்நாட்டில் ஒரு லட்சம் வகுப்பறைகள் ஆசிரியர்கள் இல்லாமல் தடுமாறும் போது கல்வித்தரம் எவ்வாறு உயரும்? ஆசிரியர்களை மதிக்காத எந்த சமூகமும் முன்னேற முடியாது. இதை உணர்ந்து ஆசிரியர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தவும், அதன் மூலம் அவர்கள் மாணவர்களை இன்னும் சிறப்பானவர்களாக மாற்றவும் தமிழ்நாடு அரசு உத்வேகம் அளிக்க வேண்டும். ஆசிரியர்கள், அவர்களால் மாணவர்கள், அவர்களால் இந்த சமுதாயம் முன்னேற வேண்டும்; அந்த இலக்கை நோக்கி உழைக்க ஆசிரியர்கள் நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x