Last Updated : 10 Jun, 2018 08:33 AM

 

Published : 10 Jun 2018 08:33 AM
Last Updated : 10 Jun 2018 08:33 AM

ஈரோடு-நாமக்கல் மாவட்டங்கள் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்து வசூல் வேட்டை: நடந்து செல்வோருக்கு ரூ.5; நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.50 கட்டணம் நிர்ணயம்

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ஊஞ்சலூர் - நாமக்கல் மாவட்டம் கண்டிபாளையம் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்து சுங்கக் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரையடுத்து வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தரைப்பாலம் அமைக்க பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கண்டிபாளையம் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பரிசல் இயக்கப்பட்டு வந்தது.

சாலை மார்க்கமாக செல்ல வேண்டுமானால் பல கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும் என்பதால் இரண்டு மாவட்ட மக்களும் பரிசலில் பயணித்து வந்தனர்.

இந்நிலையில் ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் பரிசல் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. அதேநேரத்தில், பரிசல் இயக்க அனுமதி பெற்ற ஒப்பந்ததாரர் மேற்குறிப்பிட்ட பகுதியை இணைக்கும் வகையில் அனுமதியின்றி தரைப்பாலம் அமைத்து சுங்கக் கட்டணம் வசூலித்து வந்துள்ளார்.

நடந்து சென்றாலும் கட்டணம்

இந்த மண் சாலை வழியாக நடந்து செல்பவர்களுக்கு ரூ.5, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.15, கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.50 வரை கட்டணம் நிர்ணயம் செய்து வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து நேற்று ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டாட்சியர் பாலசுப்ரமணியம் தலைமையிலான வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து தரைப்பாலத்தை இடித்து அகற்ற உத்தரவிட்டனர். இதுபோல், கொடுமுடி அருகே கருவேலம்பாளையம், நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமானதால் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டிருந்தது.

இந்த பாலம் ஜேசிபி இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த இயந்திரத்தை பறிமுதல் செய்ய வட்டாட்சியர் பாலசுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் காவிரியின் குறுக்கே பரிசல் இயக்க ஏலம் எடுத்தவர்கள், தரைப்பாலம் அமைத்து கட்டணம் வசூலித்தவர்கள் குறித்து வட்டாட்சியர் பாலசுப்ரமணியம் தலைமையிலான வருவாய்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுப்பணித்துறைதான் பொறுப்பு

இதுகுறித்து வட்டாட்சியர் பாலசுப்ரமணியம் கூறுகையில், ஈரோடு - நாமக்கல் மாவட்டம் இடையே ஊஞ்சலூர், கருவேலம்பாளையம் ஆகிய இடங்களில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பரிசல் இயக்குவதற்குதான் கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் மூலம் ஏலம் விடப்படுகிறது. ஆனால், தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தரைப்பாலத்தின் கீழ் தண்ணீர் செல்ல ஏதுவாக குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுப்பணித் துறையினர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனினும், மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கருவேலம்பாளையம் - ஜேடர்பாளையம் இடையே பாலம் அமைக்க பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆற்றைக் கடந்து செல்ல இந்த தரைப்பாலம் வசதியாக இருப்பதால், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x