Last Updated : 03 Sep, 2024 11:55 PM

1  

Published : 03 Sep 2024 11:55 PM
Last Updated : 03 Sep 2024 11:55 PM

“புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு சாத்தியம் இல்லை” - கோவையில் சசிதரூர் எம்.பி பேச்சு

எஸ்.எஸ்.வி.எம் வேர்ல்டு பள்ளியில் நடந்த கருத்தரங்கில், காணொலிக்காட்சி வழியாக கலந்து கொண்டு பேசிய முன்னாள் மத்திய இணையமைச்சரும், காங்கிரஸ் எம்.பியுமான சசிதரூர்.  அருகில், பள்ளியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன். 

கோவை: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என கோவையில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற முன்னாள் மத்திய இணையமைச்சர் சசிதரூர் எம்.பி பேசினார்.

கோவை வெள்ளலூரில் உள்ள ‘எஸ்.எஸ்.வி.எம் வேர்ல்ட்’ பள்ளியில் ‘இந்தியாவை மாற்றுவோம்’ என்ற தலைப்பில் மூன்று நாள் கருத்தரங்கு கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இக்கருத்தரங்கின் நிறைவுநாள் நிகழ்ச்சி இன்று (செப்.3) நடந்தது. இந்நிகழ்வில், முன்னாள் மத்திய இணையமைச்சரும், காங்கிரஸ் எம்.பியுமான சசிதரூர் காணொலிக்காட்சி வாயிலாக பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: “மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையில், கல்லூரிக் கல்வியில் குறிப்பிட்டுள்ள சில சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை. ஆனால், பள்ளிக் கல்வியில் அது வெறும் காகிதப் பயிற்சியாக இருக்கும் என்பதால் நடைமுறையில் சாத்தியமில்லை. அதனால், பள்ளிக் கல்வி குறித்து நான் கவலைப்படுகிறேன். கல்லூரிக் கல்வியில் கொண்டு வரப்படும் புதிய சீர்திருத்தங்கள், மாணவர்கள் பல படிப்புகளை எடுத்துப் படிக்க அனுமதிப்பது போன்றவை வரவேற்கத்தக்கதாகும்.

அதேபோல, 30 கி.மீ சுற்றளவு வரை உள்ள பள்ளிகளுடன் வசதிகளை பகிர்ந்து கொள்ள பள்ளிகளை அனுமதிக்கும் முடிவு திருப்தி அளிக்கவில்லை. விளையாட்டு மைதானம் இல்லாத எந்த பள்ளியும் தங்கள் குழந்தைகளை தொலைதூர விளையாட்டு மைதானத்திற்கு தினமும் அழைத்துச் செல்வது சாத்தியமில்லாதது. போதிய தரம் இல்லாமல் பள்ளிகள் செயல்பட அனுமதிப்பது வெறும் காகிதப் பயிற்சியாகவே அமையும். ஒரே பள்ளியில் இசை மற்றும் கணிதம் கற்க ஒரு கட்டணம் இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார். இது உண்மையாக இருந்தாலும், இரண்டு பாடங்களுக்கும் வெவ்வேறு உள்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் தேவை.

இதற்கு பணம் செலவாகும், அதை யார் செலுத்தப் போகிறார்கள்? இந்த வசதிகள் அனைத்திற்கும் மானியம் வழங்குவதற்கு அரசு தனது நிதியுதவியை போதிய அளவுக்கு உயர்த்தப் போகிறதா அல்லது வசதி வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டுமே கல்விக்கு வாய்ப்பளிக்கப்படுகின்றதா என்பதை பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும். பள்ளிகள் கூடுதல் செலவை பெற்றோருக்கு அனுப்பலாம். ஆனால் கல்வி தரமானதாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியும் கணிதம் மற்றும் இசை இரண்டையும் வழங்கினால் அது அற்புதமாக இருக்கும். ஆனால் இவை அனைத்துக்கும் அரசு போதிய வசதிகளை வழங்க வேண்டும். அப்போதுதான் இந்த திட்டங்களின் மூவம் மக்கள் பலன் பெற முடியும்” இவ்வாறு சசி தரூர் பேசினார்.

முன்னதாக, இந்நிகழ்ச்சியில் சசிதரூர் எழுதியுள்ள புதிய புத்தகம் வெளியிடப்பட்டது. அதை எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணிமேகலை மோகன் வெளியிட பள்ளியின் நிர்வாக அறங்காவலர்கள் மற்றும் மாணவர்கள் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x