Last Updated : 03 Sep, 2024 11:29 PM

 

Published : 03 Sep 2024 11:29 PM
Last Updated : 03 Sep 2024 11:29 PM

‘சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கழிவுநீரை கொண்டு செல்லாத டேங்கர்களின் உரிமம் ரத்து’ - அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: கழிவு நீரை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லாமல் அத்து மீறும் டேங்கர் லாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்துத் துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில், வாரிய செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் பேசியதாவது: “கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அடிக்கடி ஆய்வு செய்து அதன் செயல்பாட்டு திறனை உறுதி செய்ய வேண்டும். செயல்படாத நிலையங்கள் பற்றிய தகவல்களை அரசுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். டேங்கர் லாரிகளில் கழிவு நீரை உரிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்வதை உறுதிபடுத்துவதுடன், அத்துமீறும் வாகனங்களை போக்குவரத்து துறையுடன் இணைந்து வாகன உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணலி, எண்ணூர் பகுதியில் உடனடியாக மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமோனியா மற்றும் குளோரின் போன்ற ஆபத்தான ரசாயனங்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகளை தொடர்ந்து கண்காணிப்பதுடன், அவ்வாறான ரசாயனங்களை பயன்படுத்தும் வழிமுறைகள் தொழிற்சாலைகளில் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.அத்துடன், சாயத் தொழிற்சாலைகளை கண்காணித்து அறிக்கை சமர்ப்பிப்பதுடன், சாயம் மற்றும் தோல் தொழிற்சாலைகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள உப்புக் கலவைக் கழிவை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்படி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கல்குவாரிகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்க குழு அமைக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள குவாரிகளை முறையாக கண்காணிக்க வேண்டும். சாயமிடும் நடவடிக்கைகளில் ஈடுபடும் தென்னை நார் தொழிற்சாலைகளை கண்காணிக்க வேண்டும். சிவப்பு வகை தொழிற்சாலைகளை சீரான இடைவெளியில் கண்காணிப்பது அவசியம். பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள், பிளாஸ்டிக் மற்றும் மின் கழிவுகளை முறையாக மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களை அதிக எண்ணிக்கையில் அமைக்க ஊக்குவிக்க வேண்டும். அத்துடன், பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களை சுற்றி போதிய எண்ணிக்கையிலான மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளதையும் உறுதி செய்ய வேண்டும்.

பல்வேறு கழிவு மேலாண்மையின் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு இணையத்தளத்தில் தொழிற்சாலைகள் பதிவு செய்துள்ளனவா என்பதை சரிபார்க்க வேண்டும். இதுதவிர, தொழிற்சாலைகள் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியைப் பயன்படுத்தி பெருமளவில் மரங்களை வளர்க்க அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக, தமிழகத்தில் சுற்றுச்சுழல் மாசு மற்றும் அதன் விளைவுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் துறையின் செயலர் பி.செந்தில்குமார், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் டாக்டர். எம். ஜெயந்தி, வாரிய உறுப்பினர் செயலர் ஆர். கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x