Last Updated : 03 Sep, 2024 09:36 PM

2  

Published : 03 Sep 2024 09:36 PM
Last Updated : 03 Sep 2024 09:36 PM

386 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது: செப்.5-ல் வழங்குகிறார் அமைச்சர் உதயநிதி

சென்னை: பள்ளிக் கல்வித் துறை சார்பில் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தின விழா சென்னையில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 386 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.

நம்நாட்டில் மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியரை தேர்வு செய்து ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு கவுரப்படுத்தி வருகிறது. இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.10,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். அதன்படி நடப்பாண்டு மாநில நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்திருந்தது.

அதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜூலை 16 முதல் 29-ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து எமிஸ் தளம் வழியாக ஏராளமான ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். அதில் தகுதியான 386 ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி 342 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், 38 தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்திய பள்ளிகள், சமூக பாதுகாப்புத்துறை பள்ளிகள், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களில் தலா 2 பேர் என மொத்தம் 386 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தின விழா சென்னை வண்டலூரில் செப்டம்பர் 5-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நல்லாசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி பேருரையாற்றவுள்ளார்.

இதுதவிர பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோரும் சிறப்புரை ஆற்றவுள்ளனர். மேலும், இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள், இயக்குநர்கள் பலர் கலந்து கொண்டு பேச உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x