Published : 03 Sep 2024 09:23 PM
Last Updated : 03 Sep 2024 09:23 PM
கி.சென்னை: ‘பேரன்பை பொழிந்து வரவேற்ற தமிழர்களுக்கு நன்றி’ என்று, சிகாகோ நகருக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், “சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து சிகாகோவுக்கு வந்தடைந்தேன். பேரன்மைப் பொழிந்து வரவேற்று நெகிழ வைத்த தமிழ் உடன்பிறப்புகளுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த ஆக.27-ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டுச்சென்ற முதல்வருக்கு, சான்பிரான்சிஸ்கோவில் தமிழர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன்பின், கடந்த ஆக.29 - ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் உலக முதலீட்டாளர்களை சந்தித்தார். நோக்கியா உள்ளிட்ட 8 நிறுவனங்களுடன் 4600 பேருக்கு வேலையளிக்கும் வகையில் ரூ.1300 கோடிக்கான முதலீட்டுக்கு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து, கடந்த ஆக.31-ம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, அம்மக்கள் மத்தியில் பேசினார். இதையடுத்து, சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ புறப்பட்டுச் சென்றார். சிகாகோவில், தமிழர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். சிறுவர்கள் ஸ்டாலின் என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி வரவேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT