Last Updated : 03 Sep, 2024 07:57 PM

 

Published : 03 Sep 2024 07:57 PM
Last Updated : 03 Sep 2024 07:57 PM

“உங்களுக்கும், அடுத்த தலைமுறைக்கும் உழைக்கத் தயார்” - பட்டா வழங்கும் விழாவில் உதயநிதி பேச்சு

சென்னை திருவொற்றியூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார்.

சென்னை: திருவொற்றியூர் பகுதியில் 2,099 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி, “உங்களுக்கும் உங்களின் அடுத்த தலைமுறைக்கும் உழைக்கத் தயாராக உள்ளோம்,” என்று தெரிவித்தார்.

சென்னை திருவொற்றியூர், வெள்ளையன் செட்டியார் மேல் நிலைப் பள்ளியில், திருவொற்றியூர் தொகுதியில் நீண்டகாலமாக பல்வேறு காரணங்களால் வழங்கப்படாமல் இருந்த வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி இன்று (செப்.3) நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்று 2,099 பேருக்கு பட்டாக்களை வழங்கினார். நிகழ்ச்சியில், வருவாய்த்துறை செயலர் பி.அமுதா பேசும்போது, “சென்னையில் கடந்த பல ஆண்டுகளாக பட்டா வழங்குவதில் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, கடந்த 4 மாதங்களில் 33,766 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டா பெறுவதன் மூலம் வங்கிக்கடன் பெறுவது, வீட்டுமனை வாங்குதல், விற்பனை செய்தல் எளிதாக முடியும்,” என்றார்.

நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: “திராவிட மாடல் அரசின் திட்டங்களை அங்கீகரிக்கும் வகையில் கடந்த மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வெற்றியை மக்கள் அளித்தனர். சென்னை மக்கள் எப்படி வாக்களித்துள்ளனர் என்பது குறித்த ஆய்வில், அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் வாழும் பகுதிகளில் திமுகவுக்கு மிகப்பெரிய வரவேற்பு, வாக்குகள் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.

கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஏழை எளிய அடித்தட்டு, நடுத்தர மக்களுக்கான நலத்திட்டங்களை வழங்கும் அரசாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, வீடு என்பது சிலருக்கு கனவு. அதை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வீட்டுவசதி வாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டி ஒதுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜூலை மாதம் ரூ.925 கோடியில் கட்டப்பட்ட, 5,600 குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்தார். தமிழகத்தில் ஆன்லைனில் கட்டிட அனுமதி உடனடியாக வழங்கும் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. வடசென்னை வளர்ச்சித்திட்டம் ரூ.4,000 கோடியில் முதல்வர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வழங்கப்பட உள்ளது. வீடு முக்கியம் என்பதைப்போல் பட்டாவும் முக்கியம். இந்த பட்டா மூலம் பல ஆண்டு கனவுகள் பலருக்கு நனவாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் வாக்குறுதி 3 மாதங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போது, 28,848 பேருக்கு பட்டா தயாராக உள்ளது. இதில் திருவொற்றியூர் பகுதிக்கான 7 ஆயிரம் பட்டாக்களில் 2,099 பட்டாக்கள் இன்று வழங்கப்படுகிறது. மீதமுள்ள பட்டாக்கள் அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் வழங்கப்படும். உங்களுக்கும் உங்கள் அடுத்த தலைமுறைக்கும் உழைக்க நாங்கள் தயாராக உள்ளோம்,” என்று அவர் பேசினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பி.கே.சேகர்பாபு, வடசென்னை எம்பி-யான கலாநிதி வீராசாமி, எம்எல்ஏ-க்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x