Last Updated : 03 Sep, 2024 04:45 PM

7  

Published : 03 Sep 2024 04:45 PM
Last Updated : 03 Sep 2024 04:45 PM

மறியலை தடுக்க முயன்ற பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்: அருப்புக்கோட்டையில் எஸ்.பி. நேரில் விசாரணை

அருப்புக்கோட்டையில் சாலை மறியலைத் தடுக்க முயன்ற பெண் டிஎஸ்பியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இன்று (செப்.3) சாலை மறியலை தடுக்க முயன்ற பெண் டிஎஸ்பி-யின் தலை முடியைப் பிடித்து இழுத்து சிலர் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து எஸ்பி-யான கண்ணன் நேரடி விசாரணை நடத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டியைச் சேர்ந்த மினி லார் ஓட்டுநர் காளிகுமார் (33). இவர், நேற்று (செப்.2) தனது மினி லாரியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் குழாய் பதிப்பதற்கான உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு திருச்சுழி நோக்கி வந்துகொண்டிருந்தார். திருச்சுழி - ராமேஸ்வரம் சாலையில் கேத்தநாயக்கன்பட்டி விலக்கு அருகே வந்தபோது, 2 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் 5 பேர் மினி லாரியை நிறுத்தி காளிகுமாரை சரமாரியாத் தாக்கி அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இதையடுத்து காளிகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, காளீஸ்வரன், அருண்குமார், லட்சுமணன், பாலமுருகன், வீரசூரன், வேல்முருகன் ஆகிய 6 பேர் மீது திருச்சுழி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் காளிகுமாரின் உடல் செவ்வாய்க்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்படவிருந்த நிலையில், அவரது உறவினர்கள் ஏராளமானோர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் இன்று காலை குவிந்தனர். கொலையாளிகளை உடனே கைது செய்யக்கோரி அவர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள பாலமுருகன்

அப்போது அவர்களை அருப்புக்கோட்டை டிஎஸ்பி-யான காயத்ரி தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சிலர் டிஎஸ்பி காயத்ரியை தள்ளிவிட்டு, அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்கினர். இதனால், போலீஸாரும் மறியலில் ஈடுபட முயன்றவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸாரை கண்டித்து திருச்சுழி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த எஸ்பி-யான கண்ணன் சம்பவ இடத்துக்கு வந்து நேரடி விசாரணை நடத்தினார். டிஎஸ்பி தாக்கப்பட்டது தொடர்பாக குமார், பொன்குமார் உள்ளிட்ட 4 பேரை பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், டிஎஸ்பி-யான காயத்ரி மீது தாக்குதல் நடத்திய ராமநாதபுரம் அருகே உள்ள நெல்லிகுளத்தைச் சேர்ந்த பாலமுருகன் (43) என்பவரை கைது செய்தனர். மேலும், மினி லாரி ஓட்டுநர் காளிகுமார் கொலை வழக்கில் காளீஸ்வரன், அருண்குமார், லட்சுமணன், பாலமுருகன் ஆகியோரையும் போலீஸார் இன்று கைதுசெய்தனர். தலைமறைவாக உள்ள வீரசூரன், வேல்முருகன் ஆகிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x