Published : 20 Aug 2014 10:03 AM
Last Updated : 20 Aug 2014 10:03 AM
தஞ்சாவூர் மாவட்ட சிற்றூர்களில் உள்ள பழமையான வரலாற்றுத் தடயங்கள் குறித்து ஆய்வு செய்துவரும் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதர் மணி.மாறன் மற்றும் பௌத்த வரலாற்று ஆய்வாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம் ஆகியோர் பனையக்கோட்டை கிராமத்தில் மேற்கொண்ட கள ஆய்வில் தேவாரம் பாடிய அப்பர் பெருமானை சிங்கம் விழுங்குவது போன்ற வரலாற்றைக் குறிப்பிடும் தஞ்சை பாணி அரிய ஓவியம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியது: தஞ்சாவூர்- மன்னார்குடி சாலையில் சுமார் 19 கி.மீ. தொலைவில் பனையக்கோட்டை கிராமத்தில் உள்ள அப்பர் மடத்தில், சிவலிங்கத்திலிருந்து சிவபெருமான் சிங்க உருவெடுத்து, வணங்கிய நிலையில் உள்ள அப்பர் பெருமானை விழுங்குவதைப் போன்ற ஓவியம் உள்ளது.
தமிழக வரலாற்றில் சிற்பங் களும், செப்புத் திருமேனிகளும், ஓவியங்களும் இலக்கியத்தோடு தொடர்பு உடையனவாகவே காணப் படுகின்றன. மன்னர்கள், யோகி களின் உருவத்தையும், அவர் களின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளையும் இவற்றில் படைத்துக் காட்டியுள்ளனர்.
கோயில்தோறும் புராணங்களில் காணப்படும் கதைகளுக்கு ஏற்ப சிற்பங்கள், ஓவியங்களைக் காண முடிகிறது. கதைகளை படித்தறிய முடியாத எளிய மனிதர்களும் இவற்றைக் கண்டுணர வேண்டும் என்பது அன்றைய சிற்பிகளின் எண்ணமாக இருந்திருக்கலாம்.
கி.பி. 7-ம் நூற்றாண்டில் தோன் றிய பக்தி இலக்கியமான தேவாரப் பாடல்களை காட்சிப்படுத்திய சிற்பங்கள், தேவாரம் பாடிய அப்பர், சம்பந்தர், சுந்தரர் போன்றோரின் உருவங்களைக் கல்லிலும், செம்பிலும் வடித்த தோடு ஓவியங் களாகத் தீட்டி மகிழ்ந்துள்ளனர்.
தாராசுரம் கோயிலில் அப்பர் உள்ளிட்ட 63 நாயன்மார்களின் வரலாறு சிற்பங்களாகக் காணப்படு கின்றன. மேலும், அப்பர் பெருமான் ஓவியங்கள், தமிழகத்தின் சிற்றூர் களில் வைக்கப்பெற்று இன்றளவும் வழிபடப்பட்டு வருகிறது.
அப்பர், தன் இறுதிப் பதிகமான திருப்புகலூர் பதிகத்தில், “....சாவா மூவாச் சிங்கமே உன்னடிக்கே போதுகின்றேன் திருப்புகலூர் மேவிய புண்ணியனே” என்று பாடியுள்ளார். எக்காலத்தும் நிலை பெற்று நிற்கும் சிவனைப் போற்றக் கூடிய தேவாரப் பாடலின் பொருளைத் தவறாகப் புரிந்து கொண்ட சிற்பி, சிவலிங்கத்தின் லிங்க பாணத்தில் இருந்து எழுந்துவரும் சிங்கம் அப்பரை விழுங்குவதைப்போல திருப்புக லூர்க் கோயிலின் கோபுரத்தில் சிற்பமாகப் படைத்துள்ளார்.
அந்தச் சிற்பக் காட்சியை வெளிப்படுத்தும் ஓவியம் ஒன்று பனையக்கோட்டையில் உள்ளது. 200 ஆண்டுகள் பழமையான இந்த ஓவியம் மிகவும் வித்தியா சமானதாக அமைந்துள்ளது. லிங்க பாணத்தில் எழும் சிங்கம் அப்பரின் தலையைக் கவ்வி விழுங்குவது போன்று காணப்படுகிறது. அப்பர் வரலாற்றில் காணப்படும் அரிய படமாக இவ்வூரின் அப்பர் மடத்தின் ஓவியம் உள்ளது குறிப்பிடத்தக்கது என்கின்றனர் மணி.மாறன், ஜம்புலிங்கம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT