Published : 18 Aug 2014 10:33 AM
Last Updated : 18 Aug 2014 10:33 AM

டி.எஸ்.பாலையா நூற்றாண்டு விழா: நடிகர் சங்க பொதுக்குழுவில் முடிவு

பழம்பெரும் நடிகர் மறைந்த டி.எஸ்.பாலையாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட நடிகர் சங்க பொதுக்குழு தீர்மானித்துள்ளது.

நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம், சென்னை தேனாம் பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. சங்கத் தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ராதாரவி வரவேற்றார். பொருளாளர் வாகை சந்திரசேகர், நடிகர்கள் விஷால், கார்த்தி, ஆர்யா, மனோபாலா, டெல்லி கணேஷ், நாசர், பொன்வண்ணன், வையாபுரி, சின்னிஜெயந்த், சார்லி, நடிகைகள் சத்யபிரியா, நளினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சரத்குமார் பேசும்போது, ‘‘நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதத்துக்குள் இந்தப் பிரச்சினைக்கு முடிவு ஏற்படாவிட்டால் நடிகர் சங்கம் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடரும்’’ என்றார். அடுத்த ஆண்டு நடிகர் சங்கத் தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரியை நியமிப்பது, தேர்தலை எப்படி நடத்துவது என்பது குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டது.

வரவு, செலவு கணக்கும் தாக்கல் செய்யப்பட்டது. பொதுக்குழு நடந்த காமராஜர் அரங்கை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நூற்றாண்டு விழா நாடகத்தின் மூலம் அறிமுகமாகி திரைத்துறையில் சாதித்த மறைந்த டி.எஸ்.பாலையாவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நூற்றாண்டு விழா நடத்தப்படும். மூத்த கலைஞர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் நீண்டகால கலைச் சேவையை போற்றும் வகையில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படும்.

கடந்த ஆண்டு நடந்த சினிமா நூற்றாண்டு விழாவுக்காக ரூ.10 கோடி அளித்து திரையுலகினரை கவுரவித்ததற்காகவும் ‘அம்மா திரையரங்கம்’ மற்றும் எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில் ரூ.15 கோடி செலவில் 2 குளிர்சாதன படப்பிடிப்பு தளம் அமைக்கப்படும் என்று அறிவித்ததற்காகவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பது, பத்மபூஷண் விருது பெற்ற கமலுக்கு பாராட்டு தெரிவிப்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

வழக்கு போட்டவருடன் மோதல் நடிகர் சங்க புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக வழக்கு போட்டிருந்த பூச்சி முருகன், சுந்தரம் உள்ளிட்டவர்கள் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி போலீஸ் பாதுகாப்புடன் பொதுக்குழு கூட்டத்துக்கு வந்தனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கோஷம் போட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமல் வெளியே வந்த பூச்சி முருகன், நிருபர்களிடம் கூறும்போது, ‘‘நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதில் தவறுகள் நடந்துள்ளதால் நீதிமன்றத்துக்கு சென்று தடை வாங்கினேன். இதற்காக என்னை சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினர்.

அதற்கும் நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளேன். பொதுக்குழுவுக்கு வந்தபோது சரத்குமாரும், ராதாரவியும் சில பெண்களை விட்டு என்னை வெளியே செல்லும்படி கூறினர். பொதுக்குழுவுக்கு சென்றால் பல உண்மைகளை சொல்லி விடுவேன் என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது. அதனால்தான் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடக்கூட என்னை அனுமதிக்கவில்லை’’ என்றார்.

உழைக்கத் தயார்: நடிகர் விஷால்

கூட்டத்தில் விஷால் பேசும்போது, ‘‘அடுத்த ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை நடிகர் சங்கத்தின் சொந்தக் கட்டிடத்தில் நடத்த வேண்டும். புதிய கட்டிடத்துக்காக உழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நான், ஆர்யா, ஜீவா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல இளம் நடிகர்கள் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து, அந்தப் பணத்தை நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு கொடுக்கத் தயார். சங்கத்தின் தலைமைக்கு நான் எப்போதும் ஆதரவாக இருப்பேன்.

நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு நான் போட்டியிடப் போவதாக வெளிவந்துள்ள செய்தி உண்மை இல்லை’’ என்றார். நடிகர் சங்கப் பேரவையின் 61-வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x