Published : 03 Sep 2024 03:32 PM
Last Updated : 03 Sep 2024 03:32 PM

மருத்துவ கல்லூரியில் இடம் பெற்றுத் தரும் விவகாரம்: ED சம்மனை எதிர்த்த பாரிவேந்தர் மனு தள்ளுபடி

சென்னை: எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுத் தரும் விவகாரத்தில் ரூ. 88.66 கோடி மோசடி செய்ததாக வேந்தர் மூவீஸ் மதன் மற்றும் எஸ்ஆர்எம் நிறுவனர் பாரிவேந்தரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். மோசடி செய்யப்பட்ட தொகையை சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறையும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது. மாணவர்களிடம் பெற்ற தொகையை திருப்பி கொடுத்ததையடுத்து பணமோசடி வழக்கில் இருந்து பாரிவேந்தரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், பணப்பரிமாற்ற வழக்கில் பாரிவேந்தர் மற்றும் அவரது குடும்பத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த சம்மனுக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரிவேந்தர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், ‘‘ரூ. 88.66 கோடி மோசடி செய்த வழக்கில் இருந்து பாரிவேந்தர் விடுவிக்கப்பட்டுள்ளதால் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, இதுதொடர்பான சம்மனை ரத்து செய்யக்கூடாது’’ என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘விசாரணை அமைப்பு அதன் கடமையை செய்வதை தடுக்க முடியாது. மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தொடர்ந்த வழக்கில் இருந்து பாரிவேந்தர் விடுவிக்கப்பட்டாலும், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது’’ என கூறி பாரிவேந்தரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x