Published : 03 Sep 2024 03:58 PM
Last Updated : 03 Sep 2024 03:58 PM

டிசம்பர் 4, 5, 6-ல் ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் - ரயில்வே வாரியம் தகவல்

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை: ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் வரும் டிசம்பர் 4, 5, 6-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான, விதிமுறைகள், வரும் 9-ம் தேதி வெளியிட உள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

ரயில்வேயில் முதல் முறையாக 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க முடியும். 2007 தேர்தலில் எஸ்.ஆர்.எம்.யு., 35 சதவீத வாக்குகளும், டி.ஆர்.இ.யு. 30 சதவீத வாக்குகளும் பெற்று அங்கீகார தொழிற்சங்கங்களாக தேர்வாகின.

இதையடுத்து, 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், எஸ்.ஆர்.எம்.யு. 43 சதவீத வாக்குகளைப் பெற்று அங்கீகார தொழிற்சங்கமாக தேர்வு செய்யப்பட்டு, செயல்பட்டு வருகிறது. கரோனா பாதிப்பு உள்ளிட்ட சில காரணங்களால் 2019-ம் ஆண்டுக்குப் பிறகு தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடைபெறவில்லை. இது குறித்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், அடுத்த 4 மாதங்களில் ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டது. எனினும், மக்களவைத் தேர்தல் காரணமாக, இந்தத் தேர்தல் மீண்டும் தள்ளிப்போனது.

இந்நிலையில், ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் டிசம்பர் 4, 5, 6-ம் தேதிகளில் நடக்கவுள்ளது. மேலும், வரும் 9-ம் தேதி தேர்தல் விதிமுறைகள் வெளியிடப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதற்கிடையே, ரயில்வேயின் 17 மண்டலங்களில் பணியாற்றும், 12.20 லட்சம் ஊழியர்களின் ஆதரவைப் பெற ரயில்வே தொழிற்சங்கங்களின் சம்மேளனங்கள் தயாராகி வருகின்றன.

தெற்கு ரயில்வேயில், எஸ்.ஆர்.எம்.யு. எனப்படும் தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன், டி.ஆர்.இ.யு., எனப்படும் தட்ஷிண ரயில்வே தொழிலாளர் சங்கம், எஸ்.ஆர்.இ.எஸ், எனப்படும் தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

புதிய விதிமுறை: மத்திய அரசின் தொழில் உறவு தொகுப்பு சட்டத்தின்படி, தேர்தலில், 51 சதவீத ஓட்டுக்களை பெறும் சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். எந்தச் சங்கமும், 51 சதவீதம் ஓட்டு பெறவில்லை என்றால், 20 சதவீதம் ஓட்டு பெறும் சங்கங்களுக்கு ஒரு பிரதிநிதி என்ற விகிதத்தில், தொழிற்சங்கக் கவுன்சில் நியமிக்கப்படும் என்ற சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை வல்லுனர்கள் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு, ரயில்வே வாரியம் தற்போது இறுதி செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x