Published : 03 Sep 2024 11:53 AM
Last Updated : 03 Sep 2024 11:53 AM
சென்னை: ஃபார்முலா 4 கார் பந்தயம் நிறைவடைந்ததை அடுத்து போட்டி நடைபெற்ற பகுதி பழையபடி வாகன பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதோடு மட்டும் அல்லாமல், கார் பந்தய போட்டிக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட மின் விளக்குகள், தடுப்பு வேலிகளை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாட்டில் இந்தியாவின் முதல், இரவு நேர கார் பந்தயம் (ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 கார் பந்தயம்) சென்னையில் கடந்த சனி, ஞாயிறு ஆகிய 2 தினங்கள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்றது.
சென்னை தீவுத்திடல், போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை வரை 3.5 கி.மீ. சுற்றளவில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டது. அன்றைய தினங்களிலும் போட்டி நடைபெறுவதற்கு முந்தைய தினமான வெள்ளிக்கிழமை போட்டிக்கான ஒத்திகைக்காகவும் என மொத்தம் 3 நாட்கள் அப்பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
வெளிநாட்டு வீரர்கள், பிற மாநில வீரர்கள், தமிழக வீரர்கள் என கார் பந்தய வீரர்கள் உற்சாகமாக போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலதரப்பட்டவர்கள் கார் பந்தயத்தை நேரில் ரசித்து தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.
முன்னதாக, கார் பந்தயம் நடத்த ஏதுவாக சென்னை தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை வரை 3.5 கி.மீ. சுற்றளவில் உள்ள சாலைகள் மாற்றங்கள் செய்யப்பட்டது. தற்போது போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதால், பழையபடி சாலையை பழைய நிலைக்கு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், பழையபடி வாகன போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமல்லாது, கார் பந்தய போடிக்காக அமைக்கப்பட்ட மின் விளக்குகள், தடுப்பு வேலிகள் போன்றவற்றை அகற்றும் பணியும் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT