Published : 03 Sep 2024 12:06 AM
Last Updated : 03 Sep 2024 12:06 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பால் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு அரசு மானியம் வழங்க ஆணை பிறப்பித்துள்ளது. இது இந்த நிதியாண்டில் நடைமுறையில் இருக்கும். விவசாய மின்சாரம் இலவசமாக தொடரும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மின்கட்டணம் உயர்ந்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்நிலையில் புதுச்சேரி மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு: “இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2024-25 ஆம் ஆண்டுக்கான மின் கட்டண உத்தரவை 12.06.2024 அன்று வெளியிட்டது. புதிய கட்டண விகிதங்கள் 16.06.2024 முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம், புதுவை மின்துறையின் 2024-25 ஆம் ஆண்டிற்கு ஒரு யூனிட்டுக்கு கொள்முதல் விலை யூனிட்டுக்கு ரூ.6.39 என நிர்ணயத்துள்ளது. இதுவே 2023-24 ஆம் ஆண்டுக்கு யூனிட்டுக்கு ரூ.5.92 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த சராசரி விநியோக கட்டணம் உயர காரணம், மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் கொள்முதல் விலை ஏற்றமே முக்கிய காரணம்.
இணை மின்சார ஆணையத்தின் புதிய கட்டண விகிதங்கள் வீட்டு உபயோக நுகர்வோருக்கு ஏற்படும் கூடுதல் கட்டண சுமை குறித்து புதுச்சேரி அரசால் ஆலோசிக்கப்பட்டு, மின்சாரச் சட்டம் 2003-ன் பிரிவு 55-ன் விதிகளின்படி, வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு அரசு மானியம் வழங்க ஆணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து வீட்டு மின் நுகர்வோருக்கும் முதல் 100 யூனிட்டுகளுக்கு புதிய கட்டணமான யூனிட்டுக்கு ரூ.2.70க்கு 45 பைசா மானியம் தரப்படும். இதன் மூலம் பொதுமக்கள் வீடுகளில் பயன்படுத்தும் முதல் 0-100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணம் கடந்த ஆண்டில் செலுத்திய யூனிட் ஒன்றுக்கு ரூ.2.25 என்ற அதே கட்டணமே செலுத்த வேண்டும்.
அனைத்து வீட்டு மின் நுகர்வோரும், மாதந்தோறும் 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தும் மின்சாரத்திற்கு அரசு மானியமாக ஒரு யூனிட்டுக்கு 40 பைசா வழங்கப்படும். இதன் மூலம், 101 யூனிட் முதல் 200 யூனிட் வரையிலான வீட்டு மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டுள்ள யூனிட்டுக்கு ரூ.4.00க்கு பதிலாக ரூ.3.60 மட்டுமே செலுத்தலாம். மேற்கண்ட மானியம் 16.06.2024 முதல் இந்த நிதி ஆண்டில் நடைமுறையில் இருக்கும்.
அதே நேரத்தில் 201-300 யூனிட் வரை நிர்ணயித்த கட்டணமான யூனிட்டுக்கு ரூ.6, 300 யூனிட்டுக்கு மேல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் யூனிட்டுக்கு ரூ.7.50 என்பது அப்படியே தொடரும். மேலும், தற்போது நடைமுறையில் உள்ள மாதம் 100 யூனிட் மின்சாரம் கீழே உபயோகப்படுத்தப்படும்.
வீட்டு நுகர்வோர்களுக்கு 50% அரசு மானியம் தொடரும். அதேபோல் விவசாயத்திற்கு பயன் படுத்தப்படும் மின்சாரம் முழுவதும் இலவசமாக வழங்கப்படும். புதுச்சேரியில் 300 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் ரூ.7.50 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் 300 யூனிட்டுகளுக்கு மேல் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு ரூ. 9.65, 400 யூனிட்களுக்கு மேல் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு ரூ.10.70, 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கப்படும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் ரூ.11.80 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எனவே, புதுவையில் வீடு உபயோகத்திற்கு மின் கட்டணம் அண்டை மாநிலங்களை விட குறைவாகவே உள்ளது” இவ்வாறு நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
தமிழக கட்டணத்துடன் ஒப்பீடு: அமைச்சர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் புதுச்சேரி கட்டணத்தையும், தமிழக கட்டணத்தையும் அட்டவணை வெளியிட்டு அமைச்சர் ஒப்பீடு செய்து புதுச்சேரியில் கட்டணம் குறைவு என்று குறிப்பிட்டுள்ளார். இண்டியா கூட்டணி போராட்டம் நடத்திய நிலையில் இதை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT