Published : 02 Sep 2024 08:32 PM
Last Updated : 02 Sep 2024 08:32 PM
மதுரை: ''கோயில்களில் பிரசாதங்களை அறநிலையத் துறையே தயாரித்து பக்தர்களுக்கு வழங்க வேண்டும். கோயில்களை வணிக நோக்கத்துக்கான இடமாக கருதக் கூடாது'' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிரசாத கடை நடத்துவதற்கான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி திருச்சியைச் சேர்ந்த வைத்தியநாதன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி இன்று விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில், ''கோயில் பிரசாத ஸ்டால் டெண்டர் அறிவிப்பில் வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும். கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. வைஷ்ணவ திருக்கோயில்களில் 10 ஆண்டுகள் பிரசாத கடை நடத்திய முன் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுதாரர் பிராமண சமூகத்தை சேர்ந்தவர். வைஷ்ணவ சம்பிரதாயத்தை சாராதவர் என்பதால் அவரால் ஏலத்தில் கலந்து கொள்ள இயலவில்லை. எனவே டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். பிரசாத கடை நடத்துவது, மதத்தின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல. அது மதச்சார்பற்ற தன்மை கொண்டது. பிரசாதம் மடப் பள்ளியில் தயாரிக்கப்பட்டு, கடவுளுக்கு படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இது விற்பனைக்கானது அல்ல. ஆனால், கோயில் பிரசாத கடைகளில் வைக்கப்படும் பெரும்பாலான உணவுப் பொருட்கள் கடவுளுக்கு படைக்கப்படுவதில்லை. எனவே, இது மத நடைமுறையின் வரம்பிற்குள் வரவில்லை. ஆனால், வணிக நோக்கில் கோயிலில் கடை நடத்துவதற்கான டெண்டருக்கான விதிகளை நீக்க வேண்டும்'' என வாதிடப்பட்டது.
கோயில் தரப்பில், ''ஸ்ரீரங்கம் கோயில் ஒரு வைஷ்ணவ கோயில். இங்கு தென்கலை சம்பிரதாயம் பின்பற்றப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ சாதியையோ குறித்து பாகுபாடு பார்க்கப்படுவதில்லை. ஏற்கெனவே நிறுவப்பட்ட பழக்க வழக்கங்களை நீர்த்துப்போகச் செய்யக்கூடாது என்பதற்காகவே அந்த தகுதி நிர்ணயம் செய்யப்பட்டது. பக்தர்களின் மத உணர்வு பாதிக்கப்படக்கூடாது. வேறு பல கோயில்களிலும் இதுபோல கட்டுப்பாடுகள் உள்ளன. ஸ்ரீரங்கம் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் நைவேத்யம் தயாரிக்கப்பட்டு கடவுளுக்கு படைக்கப்பட்ட பின்னரே பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதனால்தான் வைஷ்ணவர்கள் அல்லாதவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் எனக் கூறப்பட்டது. அமுது செய்தலில் பங்கேற்று பிரசாதங்களை தயாரித்து கடவுளுக்கு படைப்பதும், அதனை பக்தர்களுக்கு வழங்குவதும் மத நடைமுறைகளுக்கு உட்பட்டதே. பிரசாதத்தை தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வதை வணிக நோக்கிலான நடவடிக்கையாக கருத முடியாது'' எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதி, ''கோயில்களில் அளிக்கப்படும் பிரசாதங்கள் கடவுளின் ஆசிர்வாதமாக கருதப்படுகிறது. அந்த நம்பிக்கையிலேயே பக்தர்கள் பிரசாதங்களை பெற்றுச் செல்கின்றனர். ஒவ்வொரு கோயிலிலும் தங்கள் கோயிலுக்கு என தனித்துவமான பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. இந்து சமய அறநிலையத் துறை கோயிலில் பிரசாதக் கடைகளை, தனி நபர்களுக்கு குத்தகைக்கு விடுகிறது.
திருப்பதி லட்டு, பழநி பஞ்சாமிர்தம், அழகர் கோயில் தோசை போன்றவை தனித்துவமான சிறப்பைக் கொண்டவை. பிரசாதம் வழங்குவதை வணிக நோக்கிலான நடவடிக்கையாக கருத இயலாது எனக் கூறும் அறநிலையத் துறை, தனியாரை ஏன் பிரசாதம் விற்பனைக்கு அனுமதிக்கிறது என்பது தெரியவில்லை. இந்து சமய அறநிலையத் துறையே தரமான முறையில் பிரசாதங்களை தயாரித்து பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யலாம்.
பிரசாதக் கடைகளை, வணிக நோக்கிலான தனியாருக்கு குத்தகைக்கு விடும் கோயில் நிர்வாகம் பிரசாதத்தின் தரத்தினை எவ்வாறு உறுதி செய்கிறது என்பதும் தெரியவில்லை. கோயில்கள் வணிக நடவடிக்கைகளுக்கான இடம் அல்ல என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. மதுரை அருள்மிகு கள்ளழகர் கோயிலில் பிரசாதம் கோயில் நிர்வாகத்தாலே தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. கோயில் நிர்வாகமே பிரசாதத்தை தயாரித்து வழங்குவதால் கோயிலின் வருமானம் அதிகரிக்கிறது.
இந்தியா பலவிதமான கோயில்களால் அழகுடன் காணப்படுகிறது. இந்தக் கோயில்கள் நம் நாட்டை மத ரீதியாக வளமாக்குவது மட்டுமல்லாமல், வரலாற்றுப் பெருமையையும் நிரப்புகிறது. கோயில்கள் கட்டிடக்கலை அதிசயங்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கின்றன. கோயில்கள் மத வழிபாடு மற்றும் சமூக தொடர்புகளின் மையங்கள். இவை வழிபாட்டின் ஒரு பகுதியாக இருப்பதோடு பக்தர்களுக்கு நிறைவையும் தருகின்றன.
எனவே, இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களில் பிரசாதங்களை கோயில் நிர்வாகமே தயாரித்து வழங்க முன் வர வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை ஒவ்வொரு கோயிலுக்கும் வெவ்வேறு விதமான வழிபாடு நடைமுறைகள், ஆகம விதிகள் உள்ளன. மேலும் மனுதாரர் தனது ஜிஎஸ்டி பதிவை புதுப்பிக்கவில்லை. அதன் காரணமாகவே, அவர் டெண்டரில் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT