Published : 31 Aug 2024 06:07 PM
Last Updated : 31 Aug 2024 06:07 PM

“தன்னலம் கருதாமல் சேவையாற்றும் மருத்துவர்களுக்கு பாராட்டுகள்” - ‘மருத்துவ நட்சத்திரம்’ விருது வழங்கி அமைச்சர் அர.சக்கரபாணி வாழ்த்து

மருத்துவர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’ வழங்கும் ‘இந்து தமிழ் திசை - மருத்துவ நட்சத்திரம் 2024’ விருதுகள் வழங்கும் விழா, கோவை இந்திய மருத்துவ சங்க அரங்கில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணிக்கு, ‘இந்து தமிழ்திசை’ தலைமை செயல் அதிகாரி சங்கர் வி.சுப்பிரமணியம், ஆசிரியர் கே.அசோகன் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கினர். உடன் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் டாக்டர் கே.எம்.அபுல்ஹசன், செயலாளர் எஸ்.கார்த்திக்பிரபு, பொருளாளர் எஸ்.கவுரிசங்கர். படங்கள்: ஜெ.மனோகரன்.

கோவை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில், மருத்துவப் பணியை சேவை மனப் பான்மையோடும், அர்ப்பணிப்போடும் ஆற்றி வரும் மருத்துவர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில், ‘மருத்துவ நட்சத்திரம்’ எனும் சிறப்பு விருதுகள் கடந்த மூன்றாண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், நான்காவது ஆண்டாக ‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’ வழங்கும் ‘இந்து தமிழ் திசை - மருத்துவ நட்சத்திரம் 2024’ விருதுகள் வழங்கும் விழா, கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய மருத்துவ சங்க அரங்கில் நடந்தது. இந்திய மருத்துவ சங்கம் - தமிழ்நாடு (ஐ.எம்.ஏ), ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் இணைந்து விழாவை நடத்தின.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்று கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், கரூர், திருச்சி, தேனி ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த 70 மருத்துவர்களுக்கு ‘மருத்துவ நட்சத்திரம்’ விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

‘இந்து தமிழ் திசை’ தலைமை செயல் அதிகாரி சங்கர் வி.சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசாக புத்தகம் வழங்கி பேசினார். தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் கே.எம்.அபுல்ஹசன், மதிப்புறு மாநில செயலாளர் எஸ்.கார்த்திக் பிரபு, மதிப்புறு நிதிச் செயலாளர் எஸ்.கவுரிசங் கர் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடிய, ராம்நகர் சபர்பன் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி பரிசு வழங்கினார். இவ்விழாவில், ‘இந்து தமிழ் திசை’யின் சுத்தம், சுகாதாரம் விழிப்புணர்வு தொடர் குறித்த 3 நிமிட குறும்படம் திரையிடப்பட்டது.

தொடர்ந்து இவ்விழாவில், அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது: பாரம்பரியம் மிக்க இந்து குழுமத்தின், ‘இந்து தமிழ் திசை’யின் சார்பில், மருத்துவ நட்சத்திரம் விழா ஏற்பாடு செய்து, மருத்துவர்களுக்கு விருது வழங்குவது பாராட்டுக்குரியது.

மருத்துவச் சேவையை தன்னலம் கருதாமல், பொது நோக்கத்தோடு, மக்களை காப்பாற்ற வேண்டும் என தனது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல், பணியில் ஈடுபட்டுள்ள உங்களுக்கு பாராட்டுகள். தமிழ்நாட்டில் கரோனா தொற்று தீவிரமாக இருந்த சமயத்தில் திமுக தலைவர் முதல்வராக பொறுப் பேற்றார்.

அச்சமயத்தில் கோவையில் கரோனா தொற்று பரவல் மிகத் தீவிரமாக இருந்தது. அச்சமயத்தில் கோவைக்கு நான் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டு பணிகளை மேற்கொண்டேன். கடுமையான கரோனா தொற்றையும் பொருட்படுத்தாமல் மக்கள் சேவையில் மருத்துவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கோவைக்கு ஆய்வுக்காக வந்த முதல்வர் ஸ்டாலின், கரோனா கவச உடையணிந்து, இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். நம் உயிர் முக்கியம் அல்ல, நம்மை தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்து, பொறுப்பு அளித்துள்ளனர். அந்த பொறுப்பை உணர்ந்து நான் இன்று ஆய்வுக்குச் சென்றேன்.

உயிர் போனாலும் பரவாயில்லை, மக்களை காப்பாற்ற வேண்டும் என அச்சமயத்தில் முதல்வர் கூறினார். முதல்வரின் உத்தரவின் பேரில், கரோனா சமயத்தில் கோவையில் வசிக்கும் 10 லட்சத்து 37 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.45 கோடி மதிப்பிலான அரிசி மற்றும் 7 வகையான மளிகைப் பொருட்களை இலவசமாக விநியோகித்தோம்.

மருத்துவர்கள் தன்னலம் கருதாமல், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நிறைய சேவை செய்துள்ளனர். தற்போது குரங்கு அம்மை தடுப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளீர்கள். தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவத் திட்டம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டம் ஆகியவை நாட்டில் வேறு எங்கும் இல்லை.

அதேபோல், மறைந்த முதல்வர் கருணாநிதி, தனது ஆட்சியில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப் படுத்தினார். அதன் மூலம் சாதாரண ஏழை, எளிய மக்களும் பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும் என்ற நிலையை ஏற்படுத்தினார். தற்போதைய முதல்வர் குழந்தைகள் ஆரோக்கியத்துக்காக 1 முதல் 5-ம் வகுப்பு குழந்தைகளுக்காக 20.50 லட்சம் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்குதல் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செய்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் கே.எம்.அபுல்ஹசன் பேசியதாவது: தமிழகத்தில் தொடர்ந்து 4-வது ஆண்டாக மருத்துவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் விருதுகளை வழங்கி வருவது, மருத்துவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப் பிரசாதமாகும். எதிர்மறை விமர்சனங்கள் நிலவி வரும் சூழலில் மருத்துவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மருத்துவ நட்சத்திரம் விருது வழங்கப்படுவது பெருமையான விஷயமாகும். மருத்துவர்கள் மற்ற துறையை விட தனித்து விளங்குகின்றனர். நேரம், சக்தி, அறிவு என மூன்றையும் நோயாளிகளுக்காக சுகாதாரத் துறையில் செலவழித்து வருகிறோம்.

ஜெர்மனியைச் சேர்ந்த நவீன நோயியலின் தந்தை எனப்படும் ருடால்ஃப் வர்ச்சோவின் சேவையைப் பாராட்டி ‘நோபல்' விருது வழங்கப்பட்டது. அதுபோல, ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் தற்போது மருத்துவர்களை ஊக்குவிக்க விருது வழங்குவதை பெருமையாகக் கருதுகிறோம்.

தற்போதைய சூழலில் நோயாளிகள், மருத்துவர்களிடையே உள்ள இடைவெளியைக் குறைக்க இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளை நடவடிக்கை எடுத்து வருகிறது. சுகாதாரத் துறைக்கான கட்டணம் அதிகரித்து வருகிறது. பரிசோதனை, மருந்துகள் விலை கூடுதலாகிவிட்டது. நோயாளிகள், மருத்துவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில், முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் மருத்துவ மனைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை கட்டணத்தை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்திய மருத்துவ சங்கத்தின் மதிப்புறு மாநில செயலாளர் எஸ்.கார்த்திக் பிரபு பேசியதாவது: தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பு நகரம் தொடங்கி கிராமம் வரை பரவி உள்ளது. அரசும், தனியார் மருத்துவத் துறையும் இணைந்து பணியாற்றி வருகின்றன. அந்தவகையில், இந்தியாவிலேயே சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னணியாக விளங்கி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மருத்துவர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வரும் ‘இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, இந்து தமிழ் திசை ஆசிரியர் அசோகன் வரவேற்றுப் பேசும்போது, ‘‘இந்து தமிழ்திசை நாளிதழ் 2013 செப்டம்பர் 16-ம் தேதி தொடங்கிய போது, மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை நிபுணர்களின் ஆதரவையும், நன்மதிப்பையும் இந்த அளவுக்கு பெறுவோம் என நாங்கள் நினைக்கவில்லை. இந்து தமிழ் திசை நாளிதழை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. ஆனால், தொடங்கிய இந்த 10 வருடங்களுக்குள்ளேயே இதுபோன்ற விருது வழங்கக்கூடிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு, உங்களது ஆதரவே காரணம்.

எதிர்மறையான விஷயங்கள் எங்கும் வந்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் தொடர்ந்து கவனமாக இருந்து வருகிறோம். ஒரு தவறோ, ஒரு ஆபத்தோ நடந்தால், அது மீண்டும் வேறொருவருக்கு நேராமல் இருப்பதற்கு என்ன வழியோ அதை கூறினால் போதும். பிரச்சினைகளை உருவாக்குவது அல்ல, பிரச்சினைகளை தீர்த்து, மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வது தான் ‘இந்து தமிழ் திசை’யின் நோக்கம்’’ என்றார்.

இவ்விழாவில், ‘இந்து தமிழ்திசை’யின் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் விழாவை தொகுத்து வழங்கினார். ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x