Published : 02 Sep 2024 04:02 PM
Last Updated : 02 Sep 2024 04:02 PM
கோவை: “பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து பெண்கள் புகார் அளிக்க வேண்டும். அவர்களுக்கு சட்டம் துணையாக இருக்கிறது. அரசும், தொழில் நிறுவனங்களும் பெண்கள் துணிச்சலுடன் புகார் அளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும்.” என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (செப்.2) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெண் மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது, மலையாள திரைப்பட உலகில் நடிகைகளுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் என பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
இது தொழில்நுட்ப யுகம். எது செய்தாலும் வெளியே தெரிந்து விடும். தப்பிக்க முடியாது என்று தெரிந்தும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது தொடர்கிறது. இந்தத் தைரியம் அவர்களுக்கு எப்படி வருகிறது. பெண்கள் எவ்வளவுதான் படித்து அறிவில் சிறந்து விளங்கினாலும், உயரிய பொறுப்புகளில் இருந்தாலும் சில ஆண்களுக்கு, அவர்கள் போகப் பொருளாகவே தெரிகின்றனர். பெண்ணை தாயாக, சகோதரியாக, மகளாக பார்க்கத் தோன்றுவதில்லை.
மலையாள திரைப்பட உலகில் பெண் கலைஞர்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக நடிகைகள் ஊடகங்களில் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. எந்த இடத்தில் இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
எதற்கும் பயப்படாமல், எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளாமல் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து பெண்கள் புகார் அளிக்க வேண்டும். அவர்களுக்கு சட்டம் துணையாக இருக்கிறது. அரசும், தொழில் நிறுவனங்களும் பெண்கள் துணிச்சலுடன் புகார் அளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும்.” என்று அறிக்கையில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT