Published : 02 Sep 2024 02:20 PM
Last Updated : 02 Sep 2024 02:20 PM
புதுச்சேரி: ஜவ்வாக ஆமை வேகத்தில் 16 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உப்பனாறு பாலப்பணிகளை ஆளுநர் கைலாஷ்நாதன் திங்கட்கிழமை ஆய்வு செய்தார். அப்போது அவர், “இன்னும் ஒரு வாரத்தில் ரூ. 29.25 கோடிக்கு எஞ்சிய பணிகளுக்காக டெண்டர் வைக்கப்படும்” என உறுதி தந்தார்.
புதுச்சேரி உப்பனாறு வாய்க்கால் நகரின் முக்கிய பகுதிகளை இணைத்துச் செல்கிறது. இதனால் வாய்க்காலின் மீது பாலம் அமைத்தால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக இருக்கும் என அரசு முடிவு செய்தது. குறிப்பாக. காமராஜர் சாலை மற்றும் மறைமலை அடிகள் சாலைகளை இணைக்கும் வகையில் உப்பனாற்றின் மேல் பாலம் அமைக்க 2008-ல் அரசு திட்டமிட்டது.
இதற்காக ரூ.3.50 கோடியில் பாலத்துக்கு ஃபைல் ஃபவுண்டேஷன் அமைக்கப்பட்டது. அதன்பிறகு பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு 2016ல் என்ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் ஹட்கோ மூலம் ரூ.37 கோடி கடன்பெற்று மேம்பாலம் கட்டும் பணி மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்த மேம்பாலம் 732 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் இருவழிச்சாலையாகவும், இருபுறமும் 1.50 மீட்டர் நடைபாதை இருக்கும் வகையிலும் கட்ட திட்டமிடப்பட்டது. பாலத்தின் பணிகளில் 85 சதவீதம் நடந்து முடிந்துள்ளது. காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலைகளை இணைக்கும் வகையில் இன்னும் சுமார் 50 மீட்டருக்கு பாலம் அமைக்கப்பட வேண்டும்.
பாலம் கட்ட மாநில அரசின் பங்கு தொகையில் ரூ.1.15 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதி ரூ.6 கோடி வழங்கப்படவில்லை. இதனால் 2019-ம் ஆண்டு இறுதியில் பாலத்தை கட்டி வந்த தனியார் நிறுவனம் பணிகளை நிறுத்தியது. இதனால் சுமார் 4 ஆண்டுக்கும் மேலாக பாலம் பணி கிடப்பில் கிடக்கிறது.
புதுவையில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. அதிலும் வார இறுதிநாட்களில் பல்வேறு மாநிலத்திலிருந்து சுற்றுலா பயணிகள் கார் உள்ளிட்ட வாகனங்களில் வருவதால் அந்த நாட்களில் புதுவை நகர பகுதில் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. பிரதான சாலைகளான காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலையில் வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள் இருப்பதால் கூடுதலாகவே போக்குவரத்து நெரிசல் உள்ளது.
பாலம் பணி முடிந்தால் காமராஜர் சாலை- மறைமலைஅடிகள் சாலை இணைக்கப்பட்டுநெரிசல் சிறிது குறையும். இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இப்பாலப்பணிகளை இன்று ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து ராஜ்நிவாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மீதமுள்ள பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதர பணிகளை முடிக்க ரூ. 29.25 கோடிக்கு டெண்டர் ஒருவாரத்தில் வைக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT