Published : 02 Sep 2024 12:52 PM
Last Updated : 02 Sep 2024 12:52 PM

8 நிமிடங்களுக்கு முன்னதாக வந்த வந்தே பாரத் ரயில்; கரூரில் 10 நிமிடங்களுக்கு மேலாக நின்று சென்றது

கரூர்: 8 நிமிடங்களுக்கு முன்னதாக வந்த வந்தே பாரத் ரயில் கரூர் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்களுக்கு மேலாக நின்று சென்றது.

மதுரையில் இருந்து பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி மூலம் நேற்று முன்தினம் (ஆக. 31ம் தேதி) தொடங்கி வைத்தார். அன்றைய தினம் 12.30-க்கு மேல் புறப்பட்ட வந்தே பாரத் ரயில் மதியம் 3.23க்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 35 நிமிடங்கள் தாமதமாக மாலை 3.58க்கு கரூர் வந்தது. வந்தே பாரத் ரயில் வரவேற்பு நிகழ்வில் பாஜகவினர், காங்கிரஸ் எம்.பி. செ.ஜோதிமணி பங்கேற்றனர்.

வந்தே பாரத் ரயில் திருச்சி, சேலம் ரயில் நிலையங்களில் தலா 5 நிமிடங்கள், திண்டுக்கல், கரூர், நாமக்கல், கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையங்களில் தலா 2 நிமிடங்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று (செப். 2 ஆம் தேதி) முதல் மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியது. இன்று (செப். 2 ஆம் தேதி) காலை 5.15 மணிக்கு மதுரையில் புறப்பட்ட வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், திருச்சி வழியாக காலை 8.08 மணிக்கு கரூர் வரவேண்டிய ரயில் 8 நிமிடங்கள் முன்னதாக காலை 8 மணிக்கு கரூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. மதுரை, திண்டுக்கல், திருச்சியில் ஏறிய 10க்கும் மேற்பட்ட பயணிகள் கரூரில் இறங்கினர்.

கரூரில் இருந்து நாமக்கல், சேலம், பெங்களூரு செல்லும் 10க்கும் மேற்பட்டோர் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்வதற்காக கரூர் ரயில் நிலையத்தில் ஏறினர். 8 நிமிடங்கள் முன்னதாக வந்த ரயில் 1 நிமிடம் தாமதாக 8.11 மணிக்கு கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி புறப்பட்டது. 2 நிமிடங்கள் மட்டுமே கரூரில் நிற்கும் என அறிவிக்கப்பட்டிருந்த வந்தே பாரத் ரயில் 8 நிமிடங்கள் முன்னதாக வந்ததால் 10 நிமிடங்களுக்கு மேலாக கரூர் ரயில் நிலையத்தில் நின்று சென்றது.

பெங்களூருவில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 5.58 மணிக்கு கரூர் வந்து கரூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று மாலை 6 மணிக்கு திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறது. இதுகுறித்து கரூர் ரயில் நிலைய அதிகாரிகள் கூறியது: ரயில் முன்னதாக வந்துவிட்டப்போதும் அது புறப்படும் நேரத்தில் தான் கிளம்பவேண்டும் என்பதால் கரூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் 10 நிமிடங்கள் நின்று சென்றதாக தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x