Published : 02 Sep 2024 07:36 AM
Last Updated : 02 Sep 2024 07:36 AM

பாஜக கார்ப்பரேட் கம்பெனி என்றால் பழனிசாமி அதிமுகவின் நிர்வாக இயக்குநரா? - ஹெச்.ராஜா கேள்வி

சென்னை: பாஜக கார்ப்பரேட் நிறுவனம் என்றால் பழனிசாமி அதிமுக என்றநிறுவனத்தின் நிர்வாக இயக்குநரா என தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், தமிழக பாஜக வழிகாட்டுதல் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஹெச்.ராஜா ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று சந்தித்தார். பின்னர் அவர்செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கட்சியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவரிடம் பேசியது தொடர்பாக வெளியில் தெரிவிப்பதற்கு ஒன்றும் இல்லை.கடந்த 5 ஆண்டுக்கு முன்பு, அப்போதையை எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினால் ஊழல்வாதி என சான்றிதழ் கொடுக்கப்பட்டவர்தான் செந்தில் பாலாஜி. தற்போது, அவரை ஊழல் தடுப்பு வழக்கில் விசாரிக்க தமிழக அரசுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியதை வரவேற்கிறோம்.

திமுக ஆட்சிக்கு வந்தால், செந்தில் பாலாஜி சிறையில் இருப்பார் என்று அன்றே மு.க.ஸ்டாலின் கூறினார். அவர் கூறியது போல, திமுக ஆட்சிக்கு வந்ததும் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றிருக்கிறார். கார் பந்தயம் நடத்தி விளையாட வேண்டும் என்று நினைப்பவர்கள் விளையாடுகிறார்கள். பந்தயத்தில் கலந்து கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

பாஜகவின் கட்சி விதிகளின்படி 6 ஆண்டுக்கு ஒருமுறை அகில இந்திய தலைவர் முதல் அனைவரும், உறுப்பினர் காலத்தை புதுப்பிக்க வேண்டும். அதன்படி,ஆக.2-ம் தேதியில் இருந்து அடுத்த45 நாட்கள் உறுப்பினர் அட்டை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. அகில இந்திய அளவில் ஒரு பூத்துக்கு 200 பேரை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று இலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ஒன்றியம், நகராட்சி முதல் அனைத்து நிர்வாகிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தன்னுடையை உறுப்பினர் காலத்தை புதுப்பிக்கிறார். அதனை தொடர்ந்து, கமலாலயத்தில் மாநில நிர்வாகிகள் உட்பட அனைவரும் உறுப்பினராவதற்கான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாஜக கட்சி கார்ப்பரேட் நிறுவனம்போல செயல்படுவதாக அதிமுகவினர் கூறுகின்றனர். அப்படி என்றால் பழனிசாமி அதிமுகவின் நிர்வாக இயக்குநரா என நான் கேட்கிறேன். வார்த்தைகள் இருக்கிறது என்பதற்காக அதிமுகவினர் பேசிக்கொண்டு இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x