Published : 24 Jun 2018 11:22 AM
Last Updated : 24 Jun 2018 11:22 AM
சென்னை - சேலம் பசுமை வழிச் சாலையை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 42 கிராமங்கள் வழியாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சாலை இம்மாவட்டத்தில் 59 கிமீ தூரத்துக்குச் செல்வதால், இம்மாவட்டத்தில் மட்டும் 1,300 ஏக்கர் அளவுக்கான விவசாய நிலங்கள் கையகப்படுத்த வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சேலம் -சென்னை இடையே ரூ.10,000 கோடி செலவில் 8 வழி பசுமைச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தச் சாலை காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக சேலம் வரை 274 கிமீ தூரத்துக்கு அமைக்கப்பட உள்ளது.
ஆங்காங்கே எல்லை கற்கள்
இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கிமீ தூரத்துக்கு இந்தச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தாம்பரம் அருகே மண்ணிவாக்கம் பகுதியில் தொடங்கும் இந்தச் சாலை படப்பை, குருவன்மேடு, பாலூர், அரும்புலியூர், ஆனம்பாக்கம், மணல்மேடு, ஒழுகரை, இளநகர் வழியாகச் சென்று காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான பெருநகர் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் செல்கிறது.
இம்மாவட்டத்தில் 42 கிராமங்கள் வழியாகச் செல்லும் இச்சாலைக்காக சுமார் 600 அடி அகலத்தில் செல்லும் வகையில் ஆங்காங்கே கற்கள் நடப்படுகின்றன. இந்தச் சாலையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 525 ஹெக்டேர் விவசாய நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. இது ஏறக்குறைய 1,300 ஏக்கர் ஆகும்.
கிணறு, ஏரி, கால்வாய் அழிப்பு
இந்தச் சாலைக்காக பல்வேறு கிணறுகள், வீடுகள், மரம், ஏரி கால்வாய்கள் அழிக்கப்பட உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னையில் இருந்து சேலத்துக்கு விழுப்புரம் வழியாகவும், வேலூர், கிருஷ்ணகிரி வழியாகவும் 4 வழிச் சாலைகள் ஏற்கெனவே உள்ளன. இந்த இரு சாலைகளை மேம்படுத்தினாலே போக்குவரத்துக்கான தேவைகளை ஈடுகட்ட முடியும். காஞ்சிபுரம் மாவட்டத்தின் வழியாக புதிய 8 வழிச்சாலை அமைப்பது தேவையற்றது என்று விவசாயிகள் பலர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.நேரு கூறியதாவது:
இந்த 8 வழிச் சாலையால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதனை எதிர்த்து, வரும் 26-ம் தேதி வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டமும், வரும் ஜூலை 6-ல் இந்த எட்டு வழிச் சாலைக்கான அரசாணையை எரிக்கவும் 5 மாவட்ட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்திலும் இந்தப் போராட்டம் நடத்தப்படும்.
5 ஆயிரம் வீடுகள் பாதிப்பு
இந்தச் சாலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கிமீ தூரம் செல்வதுபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கிமீ தூரமும், தருமபுரி மாவட்டத்தில் 53 கிமீ தூரமும், சேலம் மாவட்டத்தில் 38 கிமீ தூரமும், கிருஷ்ணகிரியில் 4 கிமீ தூரமும் கடந்து செல்கிறது. இத்திட்டத்துக்காக 12,000 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, 1000-க்கும் மேற்பட்ட கிணறுகள், 5,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பல ஏரிக் கால்வாய்கள் அழிக்கப்பட உள்ளன.
இது காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளின் பிரச்சினை மட்டும் அல்ல. ஐந்து மாவட்ட விவசாயிகளின் முக்கியப் பிரச்சினை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை இந்தத் திட்டத்துக்கான தனியான வருவாய் அலுவலர் நியமிக்கப்படவில்லை.
அவர் நியமிக்கப்பட்ட உடன் யாருடைய நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்பது குறித்து அறிவிப்பை வெளியிட்டு நிலங்களை கையகப்படுத்தும் பணியைத் தொடங்கிவிடுவார்கள். இந்தச் சாலைக்காக போலீஸாரைக் கொண்டு விவசாயிகளை மிரட்டுவதை விட்டுவிட்டு சாலை அமைக்கும் பணிகளை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மண்ணிவாக்கம் - பெருநகர்
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமதுவிடம் கேட்டபோது, “இந்தச் சாலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மண்ணிவாக்கம் தொடங்கி பெருநகர் வரை செல்கிறது. பாதை மட்டுமே தற்போது கூறப்பட்டுள்ளது. நில அளவீடுகள் நடைபெற்று எந்தெந்தப் பகுதியில் எவ்வளவு நிலங்கள் கையகப்படுத்தப்பட வேண்டும் என்பதெல்லாம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இன்னும் சில தினங்களில் இதுகுறித்து தகவல் தெரியவரும். ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் வட்டத்தில் அதிக இடங்கள் எடுக்கப்படும் நிலை உள்ளது. செங்கல்பட்டு வட்டத்தில் குறைந்த அளவு நிலமே எடுக்கப்பட உள்ளது” என்றார்.
ரகசிய ஆய்வு
தற்போது இந்த திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கிமீ தூரம் செல்கிறது. இங்கு யார் வசிக்கிறார்கள்? நிலத்தின் உரிமையாளர் யார் என்பன உள்ளிட்ட விவரங்களையும், இத்திட்டத்தில் அவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்களா? அல்லது எதிர்ப்பு தெரிவிப்பார்களா என போலீஸார் ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT