Published : 02 Sep 2024 05:18 AM
Last Updated : 02 Sep 2024 05:18 AM
சென்னை: பணியின்போது உயிரிழந்த காவல் உதவி ஆணையர் சிவக்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக சென்னை மற்றும் ஆவடி காவல் ஆணையர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சென்னையில் ‘பார்முலா 4’கார் பந்தயம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதற்காக கொளத்தூர் சரக காவல் உதவி ஆணையர் சிவக்குமார் நேற்று முன்தினம் தீவுத்திடல் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சகபோலீஸார் அவரை மீட்டுராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குசிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது உடல் இறுதிஅஞ்சலிக்காக அம்பத்தூர், ஒரகடம் வேளாங்கண்ணி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று வைக்கப்பட்டது. சென்னை காவல் ஆணையர் அருண் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ரூ.25 லட்சத்துக்கான காசோலையை அவர்களிடம் வழங்கினார். ஆவடி காவல் ஆணையர் சங்கரும் அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஆணையர் அருண் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து துறை என களப்பணி ஆற்றுபவர்கள் இரண்டையும் பராமரிப்பது சவாலாக இருக்கும்.
அதற்காக உடல் நிலையை சீராக பார்த்துக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறோம். அதையும் மீறி இப்படி நடந்து விடுகிறது. சிவக்குமாரின் மறைவு அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் உள்ளது. அவரது குடும்பத்தினரிடம் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து அறிவிக்கப்பட்ட ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது’ என்றார்.
இதேபோல், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஜாங்கிட் உட்பட இந்நாள், முன்னாள் போலீஸார், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஒரகடத்தில் உள்ள இடுகாட்டில் அரசு மரியாதையுடன் சிவக்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment