Published : 02 Sep 2024 06:04 AM
Last Updated : 02 Sep 2024 06:04 AM

ஆந்திராவின் ராயனபாடு ரயில் நிலையத்தில் கனமழை எதிரொலி: சென்னை - ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் உட்பட 4 விரைவு ரயில்கள் ரத்து

சென்னை: ஆந்திராவின் ராயனபாடு ரயில் நிலையத்தில் கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய பல்வேறு ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. இதுதவிர, சென்னையிலிருந்து புதுடெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு செல்லும் துரந்தோ விரைவு ரயில் உட்பட 4 விரைவு ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகின்றன.

தென் மத்திய ரயில்வேயின் விஜயவாடா - காசிப்பேட்டை மார்க்கத்தில் ராயனபாடு ரயில்நிலையத்தில் கனமழை காரணமாக, ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்விவரம்:

சென்னை சென்ட்ரல் - ஜெய்ப்பூருக்கு நேற்று மாலை 5.40 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் (12967), தாம்பரம் - ஹைதராபாத்துக்கு நேற்று மாலை 5.30 மணிக்கு புறப்படவேண்டிய விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் - புதுடெல்லிக்கு நேற்று மாலை 6.40 மணிக்கு புறப்பட வேண்டிய கிரான்ட் டிரங்க் விரைவு ரயில் (12615), சென்னை சென்ட்ரல் - புது டெல்லிக்கு நேற்று இரவு 10மணிக்கு புறப்பட வேண்டிய தமிழ்நாடு விரைவு ரயில் (12621) உட்பட 8 விரைவு ரயில்கள் ரத்துசெய்யப்பட்டன.

திருப்பிவிடப்பட்ட ரயில்கள்: சென்னை சென்ட்ரலில் இருந்து அகமதாபாத்துக்கு நேற்று காலை 10.10 மணிக்கு புறப்பட்ட ரயில், தெனாலி - செகந்திராபாத் - அகோலா வழியாக திருப்பிவிடப்பட்டது. தாம்பரம் - ஹைதராபாத்துக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட சார்மினார் விரைவு ரயிலும் திருப்பி விடப்பட்டது.

சென்னை சென்ட்ரல் - சாப்ராவுக்கு நேற்று மாலைபுறப்பட்ட விரைவு ரயில் மாற்றுபாதையில் இயக்கப்பட்டது. இதுதவிர, 22 ரயில்கள் மாற்றுபாதையில் திருப்பிவிடப்பட்டன.

சென்னை சென்ட்ரல் - புதுடெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு இன்று (செப்.2) காலை 6.35 மணிக்கு புறப்படும் துரந்தோ விரைவு ரயில் (12269), சென்னை சென்ட்ரல் - அகமதாபாத்துக்கு இன்று காலை 10.10 மணிக்கு புறப்படும் நவஜீவன் விரைவு ரயில் (12656), சென்னை சென்ட்ரல் - பிலாஸ்பூருக்கு இன்று பிற்பகல் 3.40 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (12652) உட்பட 4 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

உதவி எண்: பயணிகள் தங்களின் பயணம் தொடர்பான தகவல்களை பெற, சென்னை ரயில்வே கோட்ட உதவி எண்களான 044 - 25354995, 044 - 25354151 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x