Published : 02 Sep 2024 05:08 AM
Last Updated : 02 Sep 2024 05:08 AM

நவீன தொழில்நுட்பங்கள் மேம்பட்டாலும் நெறிசார்ந்த மருத்துவத்தை மறந்துவிடக்கூடாது: எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. துணைவேந்தர் அறிவுறுத்தல்

சென்னை: மருத்துவத் துறையில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் மேம்பட்டு வந்தாலும் நெறிசார்ந்த மருத்துவத்தையும், நோயாளிகளை மையப்படுத்திய சேவையையும் மறந்துவிடக்கூடாது என்று தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மருத்துவர் கே.நாராயணசாமி தெரிவித்தார்.

சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பார்வை அளவியல் தமிழ் நண்பர்கள் (ஓஏடிஎன்) அமைப்பு ஆகியவை சார்பில் தேசிய அளவிலானபார்வை அளவியல் (ஆப்டோமெட்ரி) கருத்தரங்கம், ஸ்ரீ ராமச்சந்திரா கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.

நாடு முழுவதும்இருந்து 1,300-க்கும் மேற்பட்ட பார்வை அளவியலாளர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், துறை சார்ந்த நிபுணர்கள் கருத் தரங்கில் பங்கேற்றனர். அதன் ஒருபகுதியாக பார்வைஅளவியல் தொடர்பான அறிவியல் கருத்தரங்குகள், மருத்துவ அமர்வுகள், விவாத அரங்குகள் ஆகியவை நடைபெற்றன.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மருத்துவர் கே.நாராயணசாமி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது: மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு, ஆழ்நிலை பகுப்பாய்வு (மெஷின் லேர்னிங்), தொலைநிலை பார்வை அளவியல் சேவைகள் எனதொழில்நுட்பம் சார்ந்த பல விஷயங்கள் மேம்பட்டு வருகின்றன.

இத்தகைய வளர்ச்சிகள் ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் நெறிசார்ந்த மருத்துவத்தையும், நோயாளிகளை மையப்படுத்திய சேவையையும், வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கற்பதையும் மறந்து விடக்கூடாது என்றார். நிகழ்வில் பார்வை அளவியல் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றியவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

ஸ்ரீராமச்சந்திரா கல்வி நிறுவன இணை துணை வேந்தர் மருத்துவர் மகேஷ் வக்கமுடி, கண்நலன் பார்வை அளவியல் துறைத்தலைவர் மருத்துவர் ராதா அண்ணாமலை, ஓஏடிஎன் அமைப்பின் நிறுவனர் ஆர்.குமரன், தலைவர் பிரீத்தா ராம்பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x