Published : 02 Sep 2024 06:12 AM
Last Updated : 02 Sep 2024 06:12 AM
சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பதற்கு திமுக அரசே காரணம் என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை திரு.வி.க.நகர் தொகுதி அதிமுகவினருக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பெரம்பூரில் நேற்று நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்று அட்டைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஓர் அரசு, ஏழை மாணவர், மாணவிகளின் விளையாட்டுத் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது வரவேற்கத்தக்கது. அதுபோன்ற எந்த ஒரு செயலையும் திமுக அரசு செய்யாமல், கோடீஸ்வரர், பெரும் பணக்காரர்களுக்காக ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படுகிறது.
திமுக அரசு முதலாளித்துவ அரசு, கார்ப்பரேட் அரசு. ஏற்கெனவே இந்த கார் பந்தயத்துக்கு அரசு ரூ.48 கோடி செலவழித்தது, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அண்ணாமலை ஆகியோர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர். அங்கே என்ன நடக்கிறது என்பது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.
மாணவர்களுக்கு போதைப் பொருள் எங்கிருந்து கிடைக்கிறது என்பதை கண்டுபிடித்து அதை கட்டுப்படுத்தி விட்டாலே போதைப்பொருள் நடமாட்டத்தை குறைக்கமுடியும். இன்றைக்கு போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதற்கு முழுக்க முழுக்க திமுக அரசுதான் காரணம்.
பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை லண்டனுக்கு சென்றுள்ளார். தற்போது 5 பேர்வந்துள்ளார்கள். யார் வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை.
தமிழ்நாட்டில் திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்றால் பாஜக அகில இந்திய கார்ப்பரேட்கம்பெனி. கூவம் மறுசீரமைப்பு எனக்கூறி மிகப்பெரிய அளவில் திமுகவினர் கொள்ளையடித்தார்கள். அதை எம்ஜிஆர் வெளிக்கொண்டு வந்தார். கூவத்தை இவர்கள் மறுசீரமைப்பு செய்ய மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT