Published : 06 Jun 2018 08:27 AM
Last Updated : 06 Jun 2018 08:27 AM
‘நீட்’ தேர்வுக்காக வெளியூர் சென்றபோது, தந்தையை பறிகொடுத்த மாணவர் மற்றும் மாணவி ஆகிய இருவரையும் ‘நீட்’ தேர்வும் கைவிட்டதால், அவர்களது குடும்பங்கள் மீளாத சோகத்தில் தவித்து வருகின்றன.
தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு கடும் எதிர்ப்பு உள்ள நிலையில், தேர்வு மையங்களை கேரளா, ராஜஸ்தான் ஆகிய வெளி மாநிலங்களில் அமைத்ததால் மாணவ, மாணவியர் அலைக்கழிப்புக்கு ஆளாயினர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள விளக்குடியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் கடந்த மாதம் 6-ம் தேதி தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுத எர்ணாகுளம் அழைத்துச் சென்றார். தேர்வு மையத்தில் மகன் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோதே, கிருஷ்ணசாமி மாரடைப்பால் உயிரிழந்தார். நீட் தேர்வு மையத்தை வெளி மாநிலத்தில் அமைத்திருந்ததால், தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்பே எர்ணாகுளம் சென்று தங்கி இருந்த கிருஷ்ணசாமி, தேர்வு மையத்துக்கு மகனை அழைத்துச் சென்று அலைந்த நிலையில் மன உளைச்சலால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரிந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின. இதரருக்கு 116 மதிப்பெண், ஓபிசி. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 96 மதிப்பெண் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கஸ்தூரி மகாலிங்கம் 84 மதிப்பெண்களை பெற்றார். இவர் பிளஸ் 2 தேர்வில் 825 மதிப்பெண் பெற்றிருந்தார். இது தொடர்பாக கஸ்தூரி மகாலிங்கத்தின் தாயார் பாரதி மகாதேவி கூறியபோது, தனது மகன் எர்ணாகுளத்துக்கு சென்ற அலைச்சல், அப்பாவுக்கு உடல்நலம் குன்றியதால் ஏற்பட்ட மன உளைச்சலால் நீட் தேர்வில் வெற்றி வாய்ப்பை தவற விட்டுள்ளார். தமிழக அரசு தனது மகனின் படிப்புக்கு சாதகமான முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வடக்குத் தெருவைச் சேர்ந்த கண்ணன் - நர்மதா ஆகியோரின் மகள் தேவி ஐஸ்வர்யா (17). மதுரை பசுமலையில் உள்ள மன்னர் கல்லூரியில் அமைத்திருந்த மையத்துக்கு தந்தை கண்ணனுடன் சென்று நீட் தேர்வு எழுதினார். அப்போது தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மகள் தந்தையிடம் நீட் தேர்வு கஷ்டமாக இருந்ததாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணன் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இந்நிலையில், நீட் தேர்வில் தேவி ஐஸ்வர்யா 92 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவர் மருத்துவராகும் கனவு நிறைவேறாததால் குடும்பத்தினர் மேலும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தேவி ஐஸ்வர்யா பிளஸ் 2-வில் 849 மதிப்பெண்கள் எடுத்துள்ள நிலையில், தந்தையை இழந்த துயரத்தோடு, நீட் தேர்வும் கைவிட்டுள்ளதால், அரசுதான் உதவ வேண்டும் என அவரது உறவினர் குபேரன் என்பவர் தெரிவித்தார்.
குடும்பத் தலைவரை இழந்த சோகத்தில் தவிக்கும் குடும்பங்களை நீட் தேர்வு முடிவுகள் மேலும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT