Published : 01 Sep 2024 06:49 PM
Last Updated : 01 Sep 2024 06:49 PM
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற மாணவர்களிடம் சில தனியார் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் பொறியியல், மருத்துவம், சட்டம் உட்பட தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே செலுத்திவிடுகிறது. இந்த திட்டத்தால் அரசுப் பள்ளி மாணவர்கள் பலர் பயன்பெற்று வருகின்றனர். இதற்கிடையே நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 3 சுற்றுகள் கலந்தாய்வு முடிந்துவிட்டன. இவற்றில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளில் சென்று சேர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற மாணவர்களிடம் சில தனியார் பொறியியல் கல்லூரிகள் கூடுதல் கட்டணத்தை செலுத்த வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதன்படி சிவகாசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர சென்ற அரசுப் பள்ளி மாணவரிடம் விடுதிக் கட்டணமாக ரூ.20 ஆயிரம் செலுத்த வேண்டுமென கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தும் ஆடியோ சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. இதுதவிர சில கல்லூரிகள் புத்தகம், சிறப்புப் பயிற்சி, ஆய்வக உபகரணங்கள் என வெவ்வேறு பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் கூறப்படுகின்றன.
இதுகுறித்து பெற்றோர்கள் சிலர் கூறும்போது, “தமிழகத்தில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு தொடர்ந்து கூறிவருகிறது. ஆனாலும், சில தனியார் பொறியியல் கல்லூரிகளின் அரசின் உத்தரவை மதிக்காமல் செயல்பட்டு வருகின்றன. இதை அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். மறுபுறம் தமிழக அரசு தரும் கல்விக்கட்டணம் போதுமானதாக இல்லை. அதை முறையாக வழங்கினால் நாங்கள் ஏன் மாணவர்களிடம் கூடுதலாக வசூலிக்கப் போகிறோம் என தனியார் கல்லூரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT