Last Updated : 01 Sep, 2024 05:45 PM

2  

Published : 01 Sep 2024 05:45 PM
Last Updated : 01 Sep 2024 05:45 PM

100 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட பகவதியம்மன் தீர்த்த கிணறு: அறநிலையத் துறையினர் ஏமாற்றம்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் தீர்த்த கிணற்றை நூறாண்டுகளுக்கு பின்னர் திறந்து காணிக்கை பணம் குறித்து ஆய்வு செய்த இந்து அறநிலையத்துறையினர்.

நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் தீர்த்த கிணறு 100 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட நிலையில் அதிலிருந்து அதிக காணிக்கை, தங்கம், வெள்ளி போன்றவை கிடைக்கும் என நினைத்த அறநிலையத் துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பழமையான கோயில். இக்கோயிலின் உள்பிரகாசத்தில் வடக்கு பக்கம் மிகவும் பழமையான புனித தீர்த்த கிணறு உள்ளது. இந்த தீர்த்த கிணறு கடற்கரை அருகே அமைந்த பின்னரும் உப்பு சுவையின்றி நல்ல குடிதண்ணீராக அமைந்திருப்பது தனி சிறப்பாகம். இந்த தீர்த்த கிணற்றில் இருந்துதான் தினமும் பகவதி அம்மனுக்கு அபிஷேகத்திற்கான புனித நீரை எடுத்து அபிஷேகம் செய்வது வழக்கம்.

கோயில் மூலஸ்தானம் முன்புள்ள வாடாவிளக்கு மண்டப சுரங்கப்பாதை வழியாகத்தான் கோயில் மேல் சாந்திகள் இந்த தீர்த்த கிணற்றுக்குள் சென்று அபிஷேகத்துக்குரிய புனித நீர் எடுத்து சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். தினமும் அதிகாலை 5 மணி, காலை10 மணிக்கு நடக்கும் அபிஷேகத்துக்குரிய புனித நீரை கிணற்றில் இருந்து குடத்தில் மேல்சாந்திகள் எடுத்து வருவார்கள்.

மேலும் அம்மனுக்கு பூஜைக்கு பயன்படுத்துவதற்குரிய புனித நீரும் இந்த தீர்த்தகிணற்றில் இருந்து தான் எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அம்மனுக்கு தினமும் படைக்கப்படும் நிவேத்தியம் தயாரிப்பதற்காகவும் இந்த தீர்த்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் மடப்பள்ளிக்கு எடுத்து கொண்டு செல்லப்படுவது வழக்கம். அதுமட்டுமின்றி வெளியூர்களில் உள்ள கோயில்களில் நடக்கும் கும்பாபிஷேகம், வருஷாபிஷேகம், திருவிழா, கொடை விழா மற்றும் சுப காரிய நிகழ்ச்சிகளுக்கு இந்த தீர்த்த கிணற்றில் இருந்துதான் குடங்களில் புனித நீர் எடுத்து பகவதி அம்மனின் காலடியில் வைத்து பூஜை செய்து கொண்டு செல்வது வழக்கம்.

இந்த தீர்த்த கிணறு புனிதத்துடன் சுத்தமாக காக்கும் வகையில் கிணற்றின் மேல் பகுதியில் இரும்பும் கம்பிவலைகளால் மூடப்பட்டு உள்ளது. இந்த தீர்த்த கிணற்றில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வெள்ளி காசுகளை கணிக்கையாக போட்டு வருகின்றனர். பக்தர்கள் காணிக்கை தீர்க்கக்கிணற்றின் மேலே உள்ள கருங்கற்களால் ஆன தளத்தில் குவிந்து கிடக்கின்றன. 100 ஆண்டுகளுக்கு பிறகும் இதுவரை கிணற்றில் இருந்து காணிக்கை எண்ணப்பட வில்லை.

இந்நிலையில் தீர்த்த கிணறு இன்று காலை திறக்கப்பட்டது. குமரி மாவட்ட திருக்கோயில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன்,மற்றும் கோயில் நிர்வாகிகள் கிணற்றில் குவிந்து கிடந்த காணிக்கை பணத்தை எடுத்து எண்ணினர். 100 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்கள் இட்ட காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இதில் 1793 ரூபாய் கிடைத்தது. தீர்த்தகிணற்றில் பக்தர்கள் காணிக்கை பணம் செலுத்துவதற்கு முறையான நடைமுறைகள் எதுவும் இல்லை. இதை மீறி பக்தர்கள் கிணற்றில் போடும் வெள்ளி காசுகளே இதில் கிடைத்தன.

இந்நிலையில் அதிக அளவில் காணிக்கை பணம், நேர்த்திக்கடனாக பக்தர்கள் போட்ட தங்கம், வெள்ளி போன்றவை கிடைக்கும் என இந்து அறநிலையத்துறையினர் நம்பிய நிலையில் ஏமாற்றம் அடைந்தனர். தீர்த்த கிணற்றின் மேல் பாதுகாப்பிற்கு கம்பி வலை போடப்பட்ட நிலையில் அதில் பக்தர்கள் காணிக்கையாக பணம் போடுவதை பல ஆண்டுகளாக தவிர்த்து வந்ததும், சில பக்தர்கள் வெள்ளிக் காசுகளை போடுவதும் தெரியவந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x