Published : 01 Sep 2024 04:08 PM
Last Updated : 01 Sep 2024 04:08 PM
கோவை: பிரபஞ்சத்தில் மனிதர்கள் வாழ்வதை போல், ஏலியன்ஸ் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. விண்வெளியில் மிதக்கும் கழிவுகள் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக உள்ளது என, இந்திய விண்வெளி வீரர் மற்றும் விமானப்படை அதிகாரி (பணி ஓய்வு) விங் கமாண்டர் ராகேஷ் சர்மா கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் வெள்ளலூரில் அமைந்துள்ள எஸ்எஸ்விஎம் வேர்ல்ட் ஸ்கூல் பள்ளியில் ‘இந்தியாவை மாற்றுவோம்’ என்ற தலைப்பில் மூன்று நாள் கருத்தரங்கு தொடங்கியது. எஸ்எஸ்விஎம் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன் வரவேற்றார்.
இந்திய விண்வெளி வீரர் மற்றும் விமானப்படை அதிகாரி (பணி ஓய்வு) விங் கமாண்டர் ராகேஷ் சர்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: நான் பள்ளி மாணவராக இருந்த போது அதிகம் கனவு காண்பேன். வகுப்பறையில் இருந்த ஜன்னல் வழியாக வானத்தை பார்த்து போர் விமானத்தில் பறப்பது போன்று கனவு கண்டேன். அதற்கு ஆசிரியர் தனக்கு தண்டனை கொடுத்ததுடன் கனவு காண்பது மட்டுமல்ல அதை நிறைவேற்ற தேவையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். அதற்கேற்ப செயல்பட்டு வாழ்வில் சாதித்தேன்.
விண்வெளி வீரர் பயிற்சி மிகவும் கடுமையாக இருக்கும். விண்வெளியில் ஒவ்வொரு முறையும் செயற்கை கோள்கள் ஏவப்படும் போது அதன் பணி முடிந்த பின் சில மீண்டும் பூமிக்கு திரும்பி கொண்டுவரப்பட்டு கடலில் விழ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால் பல செயற்கை கோள்கள் பணி காலம் முடிந்த பின் விண்வெளியில் சுற்றிக்கொண்டே உள்ளன. சில நேரங்களில் மோதல் சம்பவங்கள் நடக்கும் போது அவை உடைந்து ஸ்கிராப்பாக விண்வெளியில் சுற்றிக்கொண்டே உள்ளன. விண்வெளியில் மிதக்கும் கழிவுகளை அப்புறப்படுத்துவுது மிகவும் சவாலாக உருவெடுத்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் மீண்டும் பயன்படுத்தும் வகையிலான செயற்கை கோள் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். 50 மணி நேரம் மட்டுமே வானில் பறந்த அனுபவம் கொண்ட போதும் தனது உயரதிகாரிகள் என் மீது நம்பிக்கை வைத்து 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் பங்கேற்க அனுமதித்தனர். என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். ஒரு சீட் மட்டுமே உள்ள நிலையில் ஒரு சிறிய தவறு கூட செய்தால் விளைவுகள் பயங்கராக இருக்கும்.
18 வயதான போதுதான் நான் சூப்பர்சானிக் ரகத்தை சேர்ந்த மிக் 21 போர் விமானத்தை ஒட்டினேன். பிரபஞ்சத்தில் மனிதர்கள் வாழ்வதை போல், ஏலியன்ஸ் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. நடக்கும் போது நடக்கும். அறிவியல் முன்னேற்றங்கள் அனைத்தும் மனிதர்கள் வாழ்வுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும். விண்வெளிக்கு செல்வது மகிழ்ச்சி தரும். அங்கு பணியாற்றுவது சிரமம். பூமியில் வாழ்வது தான் அனைத்திலும் சிறந்தது. இவ்வாறு ராகேஷ் சர்மா கூறியுள்ளார்.
தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் நடந்த நிகழ்வுகளில் ஸ்ரீமதி கேசன், பல்கி சர்மா, காவேரி லால்சந்த், துஷ்யாந்த் சவாடியா ஆகியோர் பேசினர். முன்னதாக மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment