Published : 01 Sep 2024 12:03 PM
Last Updated : 01 Sep 2024 12:03 PM
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் வட சென்னையில் நடைபெறும் பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் முருகானந்தம் நேரில் ஆய்வு செய்தார்.
எழும்பூரில் காந்தி இர்வின் பாலம் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை இணையுமிடத்தில் ரயில்வே பாதையின் அருகில் ரூ.5.20 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அணுகு கால்வாய் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த தலைமைச் செயலர், பணிகளை செப்டம்பர் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, திரு.வி.க.நகர் மண்டலம், 77-வது வார்டு,டெமல்லஸ் சாலையில் ரூ.17.57 கோடியில் பக்கிங்ஹாம் கால்வாய்க்கு மழைநீர் வெளியேற்ற அமைக்கப்பட்டு வரும் நீரேற்று அறை மற்றும் இதர கட்டமைப்பு பணிகளை பார்வையிட்டார். முனுசாமி கால்வாயிலிருந்து நீரேற்று நிலையம் மூலமாக பக்கிங்ஹாம் கால்வாயில் நீர் வெளியேற்றும் செயல்பாடுகளைக் கேட்டறிந்தார். மேலும், மழைக் காலங்களில் இதன் செயல்பாடுகளைக் கண்காணித்து மழைநீர் தேங்காமல் மோட்டார்பம்புகள் மூலம் வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.
வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையின்மேல் ரூ.226 கோடியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலப் பணியை பார்வையிட்டு, மார்ச் மாதத்துக்குள் பணிகளை முடிக்கவும், ரயில் பாதைகளின் குறுக்கே அமைக்கப்படும் மழைநீர் வடிகால் பணிகளை செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்கவும் அறி வுறுத்தினார்.
திரு.வி.க. நகர் மண்டலத்தில் கொசஸ்தலையாற்றின் ரெட்டேரி, தெற்கு உபரி நீர்ப்பிடிப்பு பகுதியில் ரூ.80 கோடியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள், பேப்பர் மில்ஸ் சாலையில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை 15 நாட்களுக்குள் விரைந்து முடிக்கவும், நீர்வள ஆதாரத் துறை சார்பில் அயனாவரம் மற்றும் மாதவரம் வட்டத்தில் அமைந்துள்ள 3 கி.மீ நீளம் கொண்ட தணிகாசலம் நகர் உபரி நீர் கால்வாயில் ரூ.91.36 கோடியில் அகலப்படுத்தும் பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
வில்லிவாக்கம் ஏரியில் ரூ.40 கோடியில் நடைபெறும் புனரமைப்பு பணி மற்றும் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா அமைக்கும் பணிகளை பார்வையிட்டு, ஏரியைச் சுற்றியுள்ள காலியிடங்களில் மரக்கன்றுகளை நட்டு, சுற்றுப்புறத்தை மேலும் பசுமையாக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின் போது, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தா.கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமர குருபரன், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய், துணை ஆணையர் (பணிகள்) வி.சிவகிருஷ்ண மூர்த்தி, வட்டார துணை ஆணையர்கள் கட்டா ரவி தேஜா, கே.ஜெ.பிரவீன் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment