Published : 01 Sep 2024 11:17 AM
Last Updated : 01 Sep 2024 11:17 AM
சென்னை: அண்ணா பல்கலைக்கழக போலிஆசிரியர்கள் நியமன விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள மூவர் குழு விசாரணையை விரைவுபடுத்தி இதில் தொடர்புடைய ஆசிரியர்கள், அலுவலர்கள் மட்டுமின்றி தனியார் கல்லூரி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ், ஒரு பேராசிரியர் 32 கல்லூரிகளில் முழு நேர ஆசிரியராகப் பணியாற்றியதாக ஆவணப் படுத்தப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டி உள்ளார். அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் 211 பேர் 2,500 பதவிகளை நிரப்பியதாகப் பதிவுகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளது.
கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்த ஆய்வுக் குழு, அண்ணா பல்கலைக் கழகத்தின் நிலைக் குழு போன்றவை இதனை கவனிக்காமல் போவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படியானால், நடந்த முறைகேடுகளில் அவர்களும் பங்கு வகித்திருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
இந்த மோசமான நடைமுறை 2023 - 24ம் ஆண்டில் மட்டும் தான் நடந்துள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. கல்வி வேகமாக வணிகமயமாகி வரும் சூழலில், பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இடம்பெற்று வேகமாக வருமானம் ஈட்டலாம் என்கிற துடிப்பு, எப்படியும் மோசடி செய்யலாம் என்கிற நிலைமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதை அனுமதித்தால் உயர்கல்வியின் தரமும், மாணவர்களின் எதிர்காலமும் நிச்சயம் சீரழியும்.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ), தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி நிறுவனம் (என்ஐடிடிஆர்), அண்ணா பல்கலைக் கழகம் என மூன்று அமைப்புகளும் சேர்ந்து மூவர் குழு ஒன்றை விசாரணை செய்வதற்காக அமைத்துள்ளன. குறுகிய காலத்தில் விசாரணையை முடித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது மட்டுமல்லாமல், அவர்களை பணியமர வற்புறுத்திய தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் மீதும், முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள பல்கலைக் கழக அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT