Published : 01 Sep 2024 10:52 AM
Last Updated : 01 Sep 2024 10:52 AM
சென்னை: கூவம் ஆறு மறு சீரமைப்புத் திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவுக்கு, அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கூவம் ஆறு குறிப்பிடத்தக்க மாசுபாட்டுக்கு உள்ளாகியுள்ளது. கடந்தகால அறிக்கைகள் ஆபத்தான மோசமான நீரின் தரத்தை வெளிப்படுத்துகின்றன. கூவம் நதியை சீரமைக்க மாநில அரசு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், ஏற்கெனவே ரூ.329 கோடி செலவிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் மண்டலத் தலைவருக்கு நீங்கள் அளித்த பதிலில், அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி வழங்குதல் உட்பட நடந்துகொண்டிருக்கும் பணிகளை குறிப்பிட்டுள்ளீர்கள். இருப்பினும், இந்த முயற்சிகள் குறித்து தெளிவு இல்லாமல் உள்ளது. எனவே, சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையானது, கூவம் ஆற்றின் மறுசீரமைப்புக்காக இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து திட்டங்கள் மற்றும் அவற்றை விவரிக்கும் ஒரு விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிடக் கோருகிறேன்.
அதில், அனைத்து மறுசீரமைப்பு திட்டங்களின் சுருக்கம், ஒவ்வொரு திட்டத்தின் விளக்கம், அதன் குறிக்கோள்கள், காலக்கெடு, செலவுகள், விளைவுகள் உட்பட ஒவ்வொரு திட்டத்தின் விரிவான கணக்கை தெரிவிக்க வேண்டும். இத்திட்டத்தின் தற்போதைய சவால்கள், ஆற்றின் நிலை,திட்டமிடப்பட்ட மற்றும் உண்மையான விளைவுகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகள் பற்றி தெரிவிக்க வேண்டும்.
தற்போது, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் உட்பட சென்னையின் நீர்நிலைகளில் தினமும் விடப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரில் கிட்டத்தட்ட 30 சதவீதம் கூவம் ஆற்றில் கலக்கிறது. சுத்திகரிக்கப்படாத கழிவுநீரில் சுமார் 60 சதவீதம் பக்கிங்ஹாம் கால்வாயில் பாய்கிறது, மீதி அடையாறு ஆற்றுக்கு செல்கிறது.
பக்கிங்ஹாம் கால்வாய், கடற்கரைக்கு இணையாக செல்லும் ஒரு பெரிய கால்வாய், சென்னை நகரின் நீர்வாழ் சூழலை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இருப்பினும், இந்த ஏரிகள், ஆறுகளில் திடக்கழிவுகள் மற்றும் கழிவுநீரை திறந்துவிடுவதன் மூலம் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன,
எனவே, அடையாறு சிற்றோடையின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு (58 ஏக்கர்), அடையாறு சிற்றோடை மற்றும் முகத்துவாரத்தின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு (300 ஏக்கர்), ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு திட்டம் ஆகியவற்றின் தற்போதைய நிலையை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...