Published : 01 Sep 2024 10:50 AM
Last Updated : 01 Sep 2024 10:50 AM
சென்னை: பிராட்வேயில் பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறை செயலர் டி.கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிராட்வே பேருந்து நிலையத்தில் சிறு கடைகள் அதிகமாக உள்ளதாலும், இட நெருக்கடியாலும் நிலையத்தை நவீனப் படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. இதன் தொடர்ச்சியாக பிராட்வே பேருந்து நிலையத்தில் பல் நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்துக்கான பேருந்து நிலையம் அமைக்க ரூ.280.85 கோடி மதிப்பீட்டில் கொள்கை ரீதியிலான நிர்வாக அனுமதியை வழங்கி நகராட்சி நிர்வாகத் துறை கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
மேலும், நிலையத்துக்கு அருகிலேயே உள்ள தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்துக்கு சொந்தமான சற்று பழுதடைந்துள்ள குறளகம் கட்டிடத்தையும் இடித்து இத்திட்டத்துடன் இணைத்து பெரிய பேருந்து நிலையமும், வணிக வளாகமும் கட்டுவதற்கு தமிழ்நாடு உள் கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் ஆலோசனை வழங்கியது. இதனடிப்படையில், சென்னை மாநகராட்சி மூலம் பிராட்வேயில் உள்ள குறளகத்தை உள்ளடக்கிய பல் நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்துக்கான பேருந்து நிலையம் அமைக்க ரூ.822.70 கோடிக்கான திருத்திய நிர்வாக அனுமதியை வழங்கி முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இத்திட்ட செயலாக்கம், இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகள், சென்னை மெட்ரோ அசட் மேனேஜ்மெண்ட் லிமிடெட்’ என்ற ஒரு புதிய சிறப்பு நோக்கு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்துக்கான மொத்த மதிப்பீட்டில், பேருந்து நிலைய திட்டப் பகுதிக்கு பற்றாக்குறை நிதியாக ரூ. 200.84 கோடியை தமிழக அரசு வழங்கும். நடைபாதை மற்றும் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதிக்காக சென்னை மாநகராட்சிக்கு ரூ.115.03 கோடியை, 10 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி செலுத்த தொடங்கத்தக்க வகையிலான சலுகை கடனாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கும்.
1,100 பேருந்துகள்: மேலும், சென்னை மாநகராட்சிக்கு ரூ.506.83 கோடியை, காலம் சார்ந்த கடனாக தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் வழங்கும். இந்த பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையத்தில் 10 அடுக்குகளுடன், 1,100 பேருந்துகளை கையாளும் வகையில், சுமார் 470 கார், 800 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதி, மெட்ரோ ரயில் பயன்பாடு, மின்சார பேருந்துகளுக்கான மின்னேற்றம் செய்யும் வசதி என அனைத்து வசதிகளும் இடம் பெற்றிருக்கும். இத்திட்டமானது, சென்னை மாநகரின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான அரசின் பல்வேறு தொலை நோக்கு திட்டங்களில் ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT