Published : 01 Sep 2024 10:19 AM
Last Updated : 01 Sep 2024 10:19 AM

ஓசூர் - பொம்மசத்திரம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு எதிர்ப்பு: மாநில எல்லையில் கன்னட அமைப்பினர் சாலை மறியல்

ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் சாலை மறியலில் ஈடுபட்ட கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர்.

ஓசூர்: ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு-கர்நாடகா மாநில எல்லையில் மறியலில் ஈடுபட்ட, வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடக மாநிலம் பொம்மசந்திரம் முதல் அத்திப்பள்ளி வழியாக ஓசூருக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் 11 கி.மீ., கர்நாடகாவில் 12 கி.மீ. என மொத்தம் 23 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஓசூர் மற்றும் பெங்களூருக்கு இடையே விரைவான போக்குவரத்து வசதி ஏற்படும் என்பதால், இருமாநிலத் தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்கள் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில், ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கன்னட சலுவளி கட்சித்தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கட்சியினர், கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

ஓசூரை இணைக்க வேண்டும்... பின்னர், வாட்டாள் நாகராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஓசூர் மற்றும் உதகை ஆகியவை கர்நாடக மாநிலத்தில் அமைய வேண்டிய பகுதிகளாகும். ஆனால், காமராஜர் ஆட்சியில் இந்தப் பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டன. எனவே, ஓசூரை கர்நாடக மாநிலத்துடன் இணைத்த பின்னரே, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி அளிப்போம்.

மேகேதாட்டில் அணை கட்ட மத்திய மற்றும் கர்நாடக அரசு நிதி ஒதுக்கவில்லை என்றால், மக்களிடம் நிதி திரட்டி, அணையைக் கட்டுவோம். ஓசூரில் விமான நிலையம் அமைப்பதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அது நடக்காது.

கேரள திரைத்துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதுபோல, கர்நாடக மற்றும் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில திரைத்துறையிலும் பாலியல் தொல்லை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 50 பேரை கர்நாடக மாநில போலீஸார் கைது செய்தனர். போராட்டம் காரணமாக தமிழக எல்லையான ஜுஜுவாடியில் சிறிது நேரம் தமிழக வாகனங்கள் நிறுத்தப்பட்டன. மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர், அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x