Published : 31 Aug 2024 08:48 PM
Last Updated : 31 Aug 2024 08:48 PM

தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் 1,000+ வடமாநில தொழிலாளர்கள் குவிந்ததால் பரபரப்பு

ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளிகள்

தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலம், ஜஷிடித் பகுதிக்கு வாரத்திற்கு ஒரு முறை விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் பெண்களுக்கான பெட்டி, முன்பதிவு இல்லாத பெட்டிகள் என மொத்தம் 20 பெட்டிகள் உள்ளது. வரும் 7ம் தேதி சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வேலை செய்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் இன்று (ஆக.31) தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலம், ஜஷிடித் பகுதிக்கு செல்லும் ரயிலுக்காக ஒரே நேரத்தில் வந்து காத்திருந்தனர்.

ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தில் கூடியிருந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு ரயில் வந்தவுடன் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏறினர். இதில் ஏராளமானோர் ரயிலில் உள்ள பெண்களுக்கான பெட்டியில் ஏறி அமர்ந்ததால் அதிலிருந்த பெண்கள் கூச்சலிட்டனர். இதனால் தாம்பரம் ரயில் நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

பின்னர்ம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் பெண்கள் பெட்டிகளில் ஏறி இருந்த ஆண்களை வெளியேற்றி பெண்களை உள்ளே அமர வைத்தனர். ஆனாலும் ரயிலில் கடுமையான கூட்ட நெரிசல் இருந்தது. பின்னர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயிலில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணித்தபடி புறப்பட்டு சென்றனர். இவ்வாறு விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்கேற்ப கூடுதல் ரயில்கள் அல்லது கூடுதல் பெட்டிகளை ரயிலில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x