Published : 31 Aug 2024 07:14 PM
Last Updated : 31 Aug 2024 07:14 PM
புதுச்சேரி: “அதிகாரிகளின் கையில் நிர்வாகத்தை ஒப்படைத்துவிட்டு என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு புதுச்சேரியில் ஒரு பொம்மை அரசாக செயல்பட்டு வருகிறது,” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (ஆக.31) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி மவுனம் காக்கிறார். புதுச்சேரியில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ப முறை காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தியும், இந்த ஆட்சியில் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதற்கான ஆயத்த வேலைகளை செய்யவில்லை. உடனடியாக புதுச்சேரியில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
புதுச்சேரியில் 2 மாதங்களுக்கு முன்பு மின் கட்டண உயர்வை மின்சார இணை ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்தது. அப்போது, முதல்வரும், மின்துறை அமைச்சரும் மின் கட்டண உயர்வை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டனர். ஆனால், திடீரென்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒரு கடிதம் அனுப்பி, மின்துறை மூலமாக மின் கட்டண உயர்வு உடனடியாக அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
இதன் மூலம் முதல்வர், மின்துறை அமைச்சரின் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டு ஆணையத்தின் உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி இண்டியா கூட்டணி சார்பில் போராட்டம் அறிவித்துள்ளோம். முதல்வரும், மின்துறை அமைச்சரும் மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்க மாட்டார்கள் என்று சட்டப்பேரவையில், பேரவைத் தலைவர் செல்வம் அறிவித்தார்.
ஆனால், நீதிமன்றத்தில் மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து கொடுக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு கேட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு ஒரு தில்லுமுல்லு அரசு. இவர்கள் சொல்வது ஒன்று; செய்வது ஒன்று. இதன்மூலம் நிர்வாகம் முதல்வர், அமைச்சர்கள் கையில் இல்லை, அதிகாரிகளின் கையில் இருப்பது தெரிகிறது. ஆந்திராவில் இருந்து காலாவதியான மருந்துகள் புதுச்சேரிக்கு கொண்டுவரப்பட்டு விற்கப்படுகிறது.
மக்களின் உயிரோடு விளையாடுகின்றனர். இத்துறைக்கு முதல்வர் பொறுப்பு வகிக்கின்றார். அவரும் இதனை கண்டுகொள்வதில்லை. சட்டப்பேரவையில் மக்களை சந்திப்பது மட்டும் முதல்வரின் வேலையில்லை. நிர்வாகத்தையும் பார்க்க வேண்டும். தவறுகளை களைய வேண்டும். வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அதைவிட்டுவிட்டு அதிகாரிகளின் கையில் நிர்வாகத்தை ஒப்படைத்துவிட்டு என்.ஆர்.காங்கிரஸ் – பாஜ கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் ஒரு பொம்மை ஆட்சியாக செயல்பட்டு வருகிறது.
காவல் துறை மிகப்பெரிய ஊழலில் திளைத்துள்ளது. காவல் நிலையங்கள் கட்டப்பஞ்சாயத்து அலுவலகங்களாக மாறிவிட்டன. குற்றவாளிகளை பிடித்தால், கையூட்டு பெற்றுக் கொண்டு அவர்களை விட்டுவிடுகிறார்கள். நிலம் சம்பந்தமான பஞ்சாயத்து என்ற முறையில் போலீஸார் லட்சக்கணக்கில் கையூட்டு பெறுகிறார்கள். போக்குவரத்து போலீஸார் சுற்றுலா பயணிகளை மிரட்டி ஆயிரக்கணக்கில் பணம் பறிக்கிறார்கள். இது முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் தெரியும். ஆனால், நடவடிக்கை எடுக்க மட்டார்கள்.
இது தொடர்பாக புதிதாக வந்துள்ள டிஜிபி-யான ஷாலினி சிங் நடவடிக்கை எடுக்கிறாரா என்று பார்க்கிறேன். இல்லையென்றால் நானே டிஜிபி-யை சந்தித்து புகார் அளிப்பேன். இந்த ஆட்சியில் அரசின் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்படுகிறது. பாண்டி மெரினா கடற்கரையில் உள்ள 31 கடைகளை அமைச்சர் நமச்சிவாயத்துக்கு நெருக்கமான கார்த்திகேயன் என்பவர் கடந்த 2020-ல் டெண்டர் எடுத்து நடத்தி வருகிறார். தற்போது அங்கு சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கான இடத்தில் சுற்றுலாத்துறை அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக மேலும் 30 கடைகள் கட்டியுள்ளார். அதற்காக நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்ககிறார்.
கழிவறைக்கு பணம் வசூலிக்கிறார்கள். சதுப்பு நிலத்தில் ராட்டினம் அமைத்துள்ளார்கள். எதற்கும் அனுமதி வாங்கவில்லை. நகராட்சி அனுமதியில்லாமல் பொழுது போக்கு விளையாட்டுகள் நடத்தப்படுகிறது. துறைமுகத்துக்குச் சொந்தமான இடத்தில் அனுமதியில்லாமல், இறந்த ஒட்டகத்தை புதைத்துள்ளனர்.அமைச்சர் நமச்சிவாயத்துக்கு, கார்த்திகேயன் நெருக்கமானவர் என்பதால் காவல்துறை கண்டுகொள்வதில்லை. துறைமுகப்பகுதியில் சினிமா ஷூட்டிங் நடத்த தனியாக பணம் வசூலிக்கிறார்கள். இதன் மூலம் அரசுக்கு எந்தவித வருவாயும் வருவதில்லை. எனவே இப்படி அரசின் சொத்துக்கள், வருமானம் கொள்ளையடிக்கப்படுகிறது. இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT