Published : 31 Aug 2024 04:19 PM
Last Updated : 31 Aug 2024 04:19 PM
தஞ்சாவூர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூரில் இன்று (ஆக.31), தஞ்சை மத்திய மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவை தலைவர் சி.இறைவன் தலைமை வகித்தார். திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், வரும் செப்டம்பர் 15-ம் தேதி பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாள் விழாவையும் செப். 16-ல் திமுக பவள விழாவையும் சிறப்பாக கொண்டாடுவது. செப்.17-ம் தேதி தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது, அன்றைய தினம் சென்னையில் நடைபெறும் முப்பெரும் விழாவில் திராளானோர் சென்று பங்கேற்பது.
2021 -ம் ஆண்டு சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று, அதனை தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பணியாற்றியும், நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற உறுதுணையாக இருந்த மாநில இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, தமிழக முதல்வருக்கு உறுதுணையாக பணியாற்றிட துணை முதல்வராக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் தஞ்சாவூர் மத்திய மாவட்டச் செயலாளரும் திருவையாறு எம்எல்ஏ-வுமான துரை.சந்திரசேகரன் தீர்மானங்களை வாசித்து சிறப்புரையாற்றினார்.முன்னாள் எம்எல்ஏ-க்கள் எம்.ராமச்சந்திரன், டி.மகேஷ் கிருஷ்ணசாமி, மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, மாநகரச் செயலாளரும் மேயருமான சண்.ராமநாதன், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளரும், துணை மேயருமான அஞ்சுகம் பூபதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் து.செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment