Published : 31 Aug 2024 03:57 PM
Last Updated : 31 Aug 2024 03:57 PM

பொத்தேரி தனியார் விடுதியில் 1000 போலீஸார் சோதனை: போதைப் பொருட்கள் பறிமுதல்; மாணவர்களிடம் விசாரணை

கைது செய்யப்பட்ட ரவுடி செல்வமணி

பொத்தேரி: பொத்தேரியில் சுமார் 600 குடியிருப்புகள் கொண்ட தனியார் விடுதியில் போலீஸார் இன்று (சனிக்கிழமை) காலை அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 19 கல்லூரி மாணவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

தமிழகம் முழுவதுமே பள்ளி, கல்லூரிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் போதைப் பொருட்கள் விற்பனை சரளமாக நடப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களும், கஞ்சா சாக்லெட் விற்பனையும் தாராளமாக நடப்பதால் சமூக விரோதச் செயல்களும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் ‘அடோப் வேலி’ (Abode Valley) என்ற பெயரில் சுமார் 600 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலர் வாடகைக்கு வீடெடுத்து தங்கியுள்ளனர். இந்த விடுதி அருகில் தனியார் கல்லூரி செயல்படுவதால் அங்கு படிக்கும் மாணவர்களும் இங்கு தங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த இந்த விடுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள் புழக்கம் இருப்பதாக காவல்துறைக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் உத்தரவின் பேரில் தனியார் விடுதியின் 500 அறைகளில் இன்று அதிகாலை சுமார் 1000 போலீஸார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் 1/2 கிலோ கஞ்சா மற்றும் 6 கஞ்சா சாக்லேட், கஞ்சா ஆயில் 20 மி.லி., பாங் 5, ஸ்மோக்கிங் பார்ட் 1, ஹூக்கா மெஷின் 7, ஹூக்கா பவுடர் 6 கிலோ உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக 19 மாணவர்களிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிடிபட்ட மாணவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தொடர்ச்சியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை மாணவர்களுக்கு விநியோகம் செய்து வந்தது ஏ ப்ளஸ் கேட்டகிரி ரவுடியான செல்வமணி (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து, கூடுவாஞ்சேரி பகுதியில் பதுங்கி இருந்த நந்திவரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி செல்வமணியை போலீஸார் கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சாவும் நான்கு பட்டா கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து செல்வமணியிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா மற்றும் போதைப் பொருள் புழக்கம் இருப்பதாக கூறி தனியார் விடுதியில் ஒரே சமயத்தில் ஆயிரம் போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x