Published : 31 Aug 2024 12:24 PM
Last Updated : 31 Aug 2024 12:24 PM

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை கோரி செப்.5-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

எடப்பாடி பழனிசாமி

சென்னை: கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை கட்டக்கோரி கொள்ளிடத்தில் வரும் செப்.5-ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஆறு, ஏரி, குளங்களை தூர் வாரி, நீர்நிலைகளின் மட்டம் உயர்த்தப்பட்டது. பல்வேறு தடுப்பணைகளை தரமாகவும், உறுதியாகவும் மக்கள் பயன்பாட்டுக்கு கட்டிக்கொடுத்தது; திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பாலங்களும், சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் வடிவில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.88 கோடியில் புதிய நேப்பியர் பாலமும் கட்டிக்கொடுக்கப்பட்டு அவை மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட நேப்பியர் பாலம் அருகில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே சுமார் ரூ.6.55 கோடியில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர், கட்டி முடிக்கப்பட்ட ஒருசில மாதத்துக்குள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது. மக்கள் வரிப் பணத்தில் தரமில்லாத தடுப்புச் சுவர் கட்டப்பட்டதால் மிகப் பெரிய ஊழல் நடந்திருக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது.

ஆகவே, இந்த தடுப்புச் சுவர் கட்டப்பட்டதில் நடைபெற்ற ஊழல் குறித்து முழு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் கம்பசரம்பேட்டை அருகில் தரமான தடுப்பணை கட்டிக் கொடுத்ததுபோல, ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை ஒன்றை கட்ட வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுகவின் திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டங்களின் சார்பில் வரும் செப்.5-ம் தேதி சனிக்கிழமை காலை 10.35 மணியளவில், கொள்ளிடம் பாலம் அருகே, டோல்கேட் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையிலும், முன்னாள் அமைச்சர் எம்.பரஞ்சோதி, முன்னாள் எம்பி-யான ப.குமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x