Published : 31 Aug 2024 12:14 PM
Last Updated : 31 Aug 2024 12:14 PM

அண்ணா பல்கலை. போலி பேராசிரியர் நியமன விவகாரம்: விசாரணையை துரிதப்படுத்த சிபிஎம் வலியுறுத்தல்

கே.பாலகிருஷ்ணன் | கோப்புப்படம்

சென்னை: “அண்ணா பல்கலைக்கழக போலி பேராசிரியர்கள் நியமனங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள மூவர் குழு தனது விசாரணையை குறுகிய காலத்தில் முடிக்க வேண்டும். மேலும், முறைகேடுகளில் ஈடுபட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள் மட்டுமின்றி தனியார் கல்லூரி நிர்வாகங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று,” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்வேறு தனியார் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரி என்கின்ற அங்கீகாரத்தை (affiliation) பெறுவதற்காக 2023-24 ஆண்டில் போலியாக பேராசிரியர்களை நியமனம் செய்திருப்பது பெரும் மோசடியாகும். 224 பொறியியல் கல்லூரிகள் இம்மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தன்னார்வ அமைப்பான அறப்போர் இயக்கம் ஆவணங்களோடு அம்பலப்படுத்தி உள்ளது.

அதன்படி 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரியிலும், இருவர் 11 கல்லூரிகளிலும், மூன்று பேர் 10 கல்லூரிகளிலும் முழுநேர ஆசிரியர்களாக பணியாற்றுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார் மற்றும் பான் கார்டுகள் போலியாக சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.வேல்ராஜ், ஒரு பேராசிரியர் 32 கல்லூரிகளில் முழுநேர ஆசிரியராகப் பணியாற்றியதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டி உள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை, 211 நபர்கள் 2500 பதவிகளை நிரப்பியதாகப் பதிவுகள் உள்ளன எனக்குறிப்பிட்டுள்ளது.

கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்த ஆய்வுக்குழு (Inspection Committee), அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலைக்குழு போன்றவை இதனை கவனிக்காமல் போவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படியானால், நடந்த முறைகேடுகளில் அவர்களும் பங்கு வகித்திருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. இந்த மோசமான நடைமுறை 2023-24 ம் ஆண்டில் மட்டும் தான் நடந்துள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.

கல்வி வேகமாக வணிகமயமாகி வரும் சூழலில், பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இடம்பெற்று வேகமாக வருமானம் ஈட்டலாம் என்கிற துடிப்பு, எப்படியும் மோசடி செய்யலாம் என்கிற நிலைமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதை அனுமதித்தால் உயர்கல்வியின் தரமும், மாணவர்களின் எதிர்காலமும் நிச்சயம் சீரழியும்.

AICTE, NITTR, அண்ணா பல்கலைக்கழகம் என மூன்று அமைப்புகளும் சேர்ந்து மூவர் குழு ஒன்றை விசாரணை செய்வதற்காக அமைத்துள்ளன. குறுகிய காலத்தில் விசாரணையை முடித்து சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது மட்டுமல்லாமல், அவர்களைப் பணியமர வற்புறுத்திய தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் மீதும், முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. தமிழக அரசு இதில் உரிய தலையீடு செய்து உயர்கல்வியைப் பாதுகாக்க வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x