Published : 31 Aug 2024 11:58 AM
Last Updated : 31 Aug 2024 11:58 AM
சென்னை: அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து பேசியதுடன், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் முதலீடுகளையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவும் அமெரிக்கா நாட்டுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆக.30 அன்று அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து பேசினார்.
தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக ஆக.27 அன்று இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு சான்பிரான்சிஸ்கோ சென்றடைந்தார். சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் முதல்வர் தலைமையில் ஆக.29அன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக ஆக. 30 அன்று தமிழக முதல்வர் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
அதன் விவரங்கள்: > ஆப்பிள் நிறுவனம்: ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட்போன்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், கையடக்க கணினி (TAB) மற்றும் ஸ்மார்ட் கைகடிகாரங்கள், Headphones, Airpod போன்ற அணியக்கூடிய மின்னணு பொருட்கள் மற்றும் பாகங்கள் ஆகியவற்றை வடிவமைத்து, தயாரித்து சந்தைப்படுத்துவது மற்றும் பல்வேறு தொடர்புடைய சேவைகளை மேற்கொண்டு வருகிறது.ஆப்பிள் நிறுவனத்தின் கார்ப்பரேட் தலைமையகம் கலிபோர்னியாவின் குபெர்டினோவில் அமைந்துள்ளது. 27 நாடுகளில் 530 உலகளாவிய விற்பனை நிலையங்களுடன் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.
தமிழகத்தில் அமைந்துள்ள ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், ஹான் ஹய் (ஃபாக்ஸ்கான்), பெகட்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை தமிழக முதல்வர் சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். தமிழக முதல்வர் ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை சந்தித்து பேசியபோது, உலக மின்னணு சாதனங்கள் உற்பத்தி வரைபடத்தில் தமிழகத்துக்கான இடத்தை உறுதி செய்ததற்காக ஆப்பிள் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், மாநிலத்தின் உற்பத்தி சூழலை மேம்படுத்த தமிழக அரசின் பல்வேறு முயற்சிகளை கோடிட்டுக் காட்டியதோடு, தமிழகத்தில் திறன் வளர்ச்சி மிகுந்த இளைஞர்கள், பெண் கல்வி மற்றும் அவர்களின் திறன் வளர்ச்சி குறித்தும், தொழில்துறை, வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து தளவாட வசதிகள் போன்றவற்றில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருவது குறித்தும் எடுத்துரைத்தார். எதிர்காலத்தில் இதனை மேலும் வலுப்படுத்தி, ஆசியாவின் உற்பத்தி மையமாக தமிழகத்தை உருவாக்க இருப்பதாக முதல்வர் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே தொழில் தொடங்குவதற்கு மிகவும் உகந்த மாநிலமாக அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் விளங்கும் தமிழகத்தில் ஆப்பிள் நிறுவனம் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று முதல்வர் அழைப்பு விடுத்தார்.
கூகுள் நிறுவனம்: கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு, ஆன்லைன் விளம்பரம், தேடுபொறி தொழில்நுட்பம் (Search Engine Technology), கிளவுட் கம்ப்யூட்டிங், கணினி மென்பொருள், குவாண்டம் கம்ப்யூட்டிங், இ-காமர்ஸ் மற்றும் நுகர்வோர் மின்னணுவியல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் தொழில்நுட்ப நிறுவனமாகும். கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் (Alphabet) அமெரிக்க பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். கூகுள் நிறுவனத்தின் தலைமையகம் கலிபோர்னியாவின் மவுண்டன் வியூவில் அமைந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை தமிழக முதல்வர் சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, தமிழகத்தில் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கூகுள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை மவுண்டன் வியூ வளாகத்தில் சந்தித்த போது, தமிழகத்தில் தயாரிக்கப்படும் பிக்சல் 8 போன்கள் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும், கூகுள் நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை தமிழகத்தில் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், ஸ்டார்ட்-அப்கள், தொழில்துறை சுற்றுச்சூழல் இயக்கம் மற்றும் எதிர்காலத்துக்கான திறன் ஆகியவற்றில் AI கண்டுபிடிப்புகள் மூலம் வளர்ச்சியை அதிகரிப்பது குறித்தும் பேசினார்.
இந்தியாவின் மிகப்பெரிய திறன் மேம்பாட்டு முயற்சியான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், கூகுளுடன் இணைந்து எதிர்காலத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களை அதிநவீன AI திறன் வளர்ச்சியுடன் தயார்படுத்த தமிழகம் தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.
கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: தமிழக முதல்வர் முன்னிலையில், கூகுள் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்களை நிறுவுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை தமிழக முதல்வர் சந்தித்து, தமிழகத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து அழைப்பு விடுத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Linkedin முதன்மை செயல் அலுவலர் யான் ரோஸ்லான்ஸ்கி மற்றும் உயர் அலுவலர்களை சந்தித்து, டேட்டா சென்டர் விரிவாக்கம், Global Capability Centre (GCC) மற்றும் AI திறன் முயற்சிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து பேசினார்.
இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி.அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் சமூகவலைதளப் பதிவு: முன்னதாக, இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வளைதளப் பக்கத்தில், “ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களுக்குச் சென்று பார்வையிட்டது வியப்பூட்டும் அனுபவமாக அமைந்தது. பல்வேறு வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைகள் பற்றிப் கலந்துரையாடினோம். இந்தக் கூட்டாண்மைகளை வலுப்படுத்தி, ஆசியாவின் முதன்மையான வளர்ச்சி பெற்ற மாநிலமாகத் தமிழத்தை உயர்த்த உறுதிபூண்டுள்ளோம்,” என்று பதிவிட்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment