Last Updated : 31 Aug, 2024 10:50 AM

1  

Published : 31 Aug 2024 10:50 AM
Last Updated : 31 Aug 2024 10:50 AM

அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கான ஜூன் மாத நிதியை மத்திய அரசு வழங்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஸ்

அமைச்சர் அன்பில் மகேஸ்

நெல்லை: அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய நிதியை கொடுக்காததால் பல லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கிய பிறகு அதனை வழங்க நிபந்தனைகள் விதிப்பது சரியல்ல என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: பள்ளிக்கல்வித்துறையில் கடந்த ஆண்டுக்கான அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கான பணம் வந்து சேர்ந்து விட்டது. அதில் சுமார் 230 கோடி ரூபாயை குறைத்து விட்டார்கள். 2120 கோடி ரூபாய் நாம் கேட்டிருந்த நிலையில் 1876 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டிற்கு 2300 கோடி ரூபாய் கேட்டிருந்த நிலையில் முதல் தவணையாக ஜூன் மாதத்தில் கொடுக்க வேண்டிய 540 கோடி ரூபாய் நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. பிரதம மந்திரி மாதிரி பள்ளிகள் திட்டத்தின் மூலம் 14,500 புதிய பள்ளிகள் கொண்டு வர உள்ளனர். அதில் மறைமுகமான தீர்மானங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது தெரியாது. எனவே அதனை ஏற்கவில்லை.

தமிழக அரசின் கல்வித்துறை சார்ந்த உயர்மட்ட குழு முடிவின் அடிப்படையில் தான் அது குறித்து முடிவெடுக்க முடியும். பிரதம மந்திரி மாதிரி பள்ளியில் தேசிய கல்வி கொள்கையை கொண்டு வருவார்கள். ஆகவே பிரதம மந்திரி மாதிரி பள்ளி நிதியை நாம் கேட்கவில்லை. அனைவருக்கும் கல்வி தொடர்பான நமக்கு தர வேண்டிய நிதியை தான் கேட்கிறோம்.

நாடாளுமன்றத்தில் ஒரு திட்டத்திற்காக நிதியை ஒதுக்கி விட்டால் அதன் பிறகு அதனை வழங்க நிபந்தனைகளை விதிப்பது சரியானது அல்ல, அது ஏற்புடையது அல்ல. மேலும் தமிழக அரசின் அடுத்தகட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சர் இடம் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தூண்டில் வளைவு அமைப்புப் பணிகள்.. நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் கூடங்குளம், உவரி, கூட்டப்புளி உள்பட 10 க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்கள் உள்ளன. இங்கு கடல் அரிப்பு காரணமாக கடல் தண்ணீர் ஊருக்குள் வருவதும், மீன்பிடிக்க செல்வதில் சிரமமும் ஏற்பட்டது. இதனையடுத்து இங்கு பல கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூட்டப்புளி கடற்கரை கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டு கடல் குடியிருப்பு பகுதிகளை அரிக்கத் தொடங்கியது.

மேலும் மீனவர்கள் கரைகளில் தங்களது படகுகளை நிறுத்திவைப்பதிலும் சிரமம் ஏற்பட்டது . இதனால் கூட்டப்புளி மக்கள் நீண்டநாட்களாக தூண்டில் வளைவுகேட்டு கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து தமிழக முதல்வர் மீனவ மக்களின் கோரிக்கையை ஏற்று கூட்டப்புளி கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்க 48.50 கோடி நிதி ஒதுக்கினார்.

இதற்கான பணிகள் தொடக்க விழா கூட்டப்புளி கிராமத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தூண்டில் வளைவு அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x