Published : 31 Aug 2024 10:03 AM
Last Updated : 31 Aug 2024 10:03 AM

சென்னை ‘பார்முலா 4’ கார் பந்தயத்துக்கு மழை அச்சுறுத்தல்!

சென்னை: தெற்கு ஆசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர சாலை பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த போட்டி இன்றும் (31-ம் தேதி), நாளையும் (செப்டம்பர் 1) நடக்கிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை பார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நடத்தப்பட உள்ளது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இறுதிக்கட்டப் பணிகளை நேற்றிரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இச்சூழலில், இப்போட்டிக்கு புதிய சவாலாக எழுந்துள்ளது வானிலை நிலவரம்.

நேற்றிரவு முதல் மழை: சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாகவே,வெயில் தணிந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு 8 மணி முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய மிதமானது முதல் கனமழை வரை பெய்தது. குறிப்பாக, சென்னை நகரில் வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, தி.நகர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சேத்துப்பட்டு, வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இது தவிர, முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி என சென்னை- திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளிலும் பலத்தமழை பெய்தது. மேலும், கோயம்பேடு, முகப்பேர், போரூர், மதுரவாயல், வானகரம், தாம்பரம், மேடவாக்கம், திருவான்மியூர் பகுதிகளிலும் காற்றுடன் கூடிய மழை பெய்தது.

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: மேலும், தமிழகத்தில் இன்று (ஆக.31) முதல் செப்.5-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தண்ணீர் அகற்றம்: இதற்கிடையில் நேற்றைய மழையால் பந்தயப் பாதையில் தேங்கிய தண்ணீரை அகற்றி சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்றது. ஏற்கெனவே கடந்த 2023 டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த சென்னை பார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தய நிகழ்வுகள் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக தமிழக அரசால் ஒத்திவைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

மழை சவால் இருந்தாலும்கூட சென்னைவாசிகளுக்கு இந்த பந்தயம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையொட்டியே, சென்னை பார்முலா ரேசிங் சர்க்யூட் நிகழ்வை பார்க்க ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக மெட்ரோ க்யூஆர் பயணச் சீட்டு மூலம் சென்னை மெட்ரோவில் பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

போட்டி நடைபெறும் பகுதி எது? பந்தயப் பாதை தீவுத்திடலில் தொடங்கி மீண்டும் அங்கேயே சென்றடையும் வகையில் பந்தயம் அமைக்கப்பட்டுள்ளது. 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட் தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர்பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. இது தெற்கு ஆசியாவிலேயே மிக நீளமான ஸ்ட்ரீட் சர்க்யூட் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x