Published : 31 Aug 2024 04:19 AM
Last Updated : 31 Aug 2024 04:19 AM
சென்னை: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நோக்கியா, பேபால், ஈல்டு இன்ஜினீயரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப், இன்ஃபிங்ஸ், அப்ளைடுமெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர்ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோ நகரில்கடந்த 29-ம் தேதி நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விவரம்:
‘ஃபார்ச்சூன் 500’ நிறுவனங்களில் ஒன்றான நோக்கியாவின் பன்னாட்டு விநியோக மையம், உற்பத்தி நிலையம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை அடுத்த சிறுசேரி சிப்காட்டில் ரூ.450 கோடி முதலீட்டில் உலகின் மிகப்பெரிய நிலையான நெட்வொர்க் சோதனை வசதி கொண்ட ஆராய்ச்சி, மேம்பாட்டு மையம் அமைக்க நோக்கியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அமெரிக்காவின் பன்னாட்டு நிதி தொழில்நுட்ப நிறுவனமான ‘பேபால் ஹோல்டிங்ஸ்’, சென்னையில் 2,500-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவுக்கான மேம்பட்ட வளர்ச்சி மையம் அமைக்க இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
செமி கண்டக்டர் சுற்றுச்சூழல் அமைப்புக்கான தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் செயல்முறை உபகரணங்களை வழங்கும் முன்னணி நிறுவனமான ‘ஈல்டு இன்ஜினீயரிங் சிஸ்டம்ஸ்’, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் ஃப்ரீமான்ட் நகரை தலைமையிடமாக கொண்டுசெயல்படுகிறது. தமிழகத்தின் கோவை மாநகரில் இந்நிறுவனத்தின் பொறியியல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ரூ.150 கோடி முதலீட்டில் கோவை சூலூரில் செமி கண்டக்டர் உபகரணங்களுக்கான தயாரிப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி வசதிஅமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அமெரிக்காவின் அரிசோனா மாநிலம் சாண்ட்லர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘மைக்ரோசிப் டெக்னாலஜி’ நிறுவனம், ‘ஃபார்ச்சூன் 500’ நிறுவனங்களில் ஒன்று. சிறந்த செமி கண்டக்டர் சப்ளையர் நிறுவனமாக உள்ளது. 5ஜி, மின்சார வாகனங்கள், IOT, தரவு மையங்கள் உள்ளிட்ட துறைகளுக்கான பாதுகாப்பு தீர்வுகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. மைக்ரோ கன்ட்ரோலர், மிக்ஸட் சிக்னல் உள்ளிட்டவை இதன் தயாரிப்புகள் ஆகும்.
கடந்த 2012-ம் ஆண்டு முதல் சென்னையிலும் இயங்கி வருகிறது. இந்நிலையில், சென்னையில் ரூ.250 கோடியில் செமி கண்டக்டர் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி, மேம்பாட்டு மையம் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கலிபோர்னியா மாநிலம் சான் ஜோஸ் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘இன்ஃபிங்ஸ் ஹெல்த்கேர்’ நிறுவனம், மதுரை எல்காட்டில் ரூ.50 கோடி முதலீட்டில் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய விநியோக மையம் அமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கலிபோர்னியா மாநிலம் சான்டாகிளாரா நகரை கார்ப்பரேட் தலைமையகமாக கொண்டு செயல்படும் ‘அப்ளைடு மெட்டீரியல்ஸ்’ நிறுவனம், உலகின் நம்பர் 1 செமி கண்டக்டர் மற்றும் காட்சி உபகரணங்கள் உற்பத்தி நிறுவனம் ஆகும். சென்னையில் விற்பனை, சேவை, கள ஆதரவு வசதிகளையும், கோவையில் சேவை மற்றும் கள ஆதரவு வசதிகளையும் இந்நிறுவனம் அமைத்துள்ளது. சென்னைதரமணியில் செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் உபகரணங்களுக்கான மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் அமைக்க இந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கண்ட நிறுவனங்களுக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில்,வர்த்தகம், முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா, துறை செயலர் வி.அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு, சான் பிரான்சிஸ்கோவுக்கான இந்திய துணை தூதர் ஸ்ரீகர் ரெட்டி மற்றும் சம்பந்தப்பட்ட தொழில்நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முதல்வர் ஸ்டாலின் அழைப்பு: மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, ‘‘300-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் தங்கள் திட்டங்களை நிறுவியுள்ளன. இந்த வரிசையில் இன்னும் பல நிறுவனங்கள் தமிழகத்துக்கு வரவேண்டும். ஏற்கெனவே தொழில் தொடங்கிய நிறுவனங்களும், தொழிலை விரிவுபடுத்த வேண்டும். தமிழகத்தின் தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு நீங்கள் பங்களிக்க முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தமிழகம் காத்திருக்கிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT