Last Updated : 30 Aug, 2024 07:54 PM

 

Published : 30 Aug 2024 07:54 PM
Last Updated : 30 Aug 2024 07:54 PM

மதுரை - பெங்களூர்: தென் மாவட்டத்தில் இருந்து 3-வது ‘வந்தே பாரத்’ சேவை | முழு விவரம்

மதுரை: தென்மாவட்டத்தில் இருந்து ‘வந்தே பாரத்’ ரயிலின் 3-வது ரயிலான மதுரை - பெங்களூர் ரயில் சேவை நாளை (சனிக்கிழமை) தனது முதல் பயணத்தை தொடங்குகிறது. சென்னை - நாகர்கோயில் மற்றும் மதுரை - பெங்களூர் இடையே சனிக்கிழமை (ஆக.31) ‘வந்தே பாரத்’ ரயில் முதல் சேவையை தொடங்குகிறது. இரண்டு ரயில் சேவைகளையும் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் தொடக்க நாள் சிறப்பு ரயில் சென்னையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். சென்னை விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சென்னை மேயர் பங்கேற்கின்றனர்.

மதுரை - பெங்களூர் கண்டோன்மென்ட் ‘வந்தே பாரத்’ மதுரையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு பெங்களூர் சென்று சேரும். மதுரை விழாவில் மத்திய ரயில்வே துறை மற்றும் ஜல் சக்தி துறை இணை அமைச்சர் வி. சோமன்னா, தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மேயர் வி. இந்திராணி பங்கேற்கின்றனர்.

இந்த ரயில்களின் வழக்கமான சேவை செப்டம்பர் 2 முதல் தொடர்ந்து இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் (20627) சென்னை எழும்பூரில் இருந்து புதன்கிழமை தவிர, வாரத்தின் மற்ற நாட்களில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் (20628) நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மதுரை - பெங்களூர் வந்தே பாரத்: மதுரை - பெங்களூர் கன்டோன்மெண்ட் வந்தே பாரத் ரயில் (20671) செப்டம்பர் 2 முதல் மதுரையில் இருந்து செவ்வாய்க்கிழமை தவிர, பிற நாட்களில் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் சென்று சேரும். மறுமார்க்கத்தில் பெங்களூரு கண்டோன்மெண்ட் - மதுரை வந்தே பாரத் ரயில் (20672) பெங்களூரு கண்டோன்மெண்டில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தொடக்க நாள் சிறப்பு ரயில்கள் நிற்கும் ரயில் நிலையங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள், பயணியர் சங்கத்தினர், மாணவர்கள், முக்கிய பிரமுகர் மற்றும் பொது மக்கள் பங்கேற்கின்றனர். முக்கிய பிரமுகர்கள், சில மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு தொடக்க நாள் சிறப்பு ரயிலில் பயணம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மொத்த பயண நேரம் 7.45. பயணத்தூரம் சுமார் 573 கிலோ மீட்டர் என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இரண்டு ‘வந்தே பாரத் ’ ரயில்கள் மதுரை வழியாக சென்ற போதிலும் மதுரையில் இருந்து முதல் ‘வந்தே பாரத்’ சேவை பெங்களுக்கு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x