Last Updated : 30 Aug, 2024 07:51 PM

2  

Published : 30 Aug 2024 07:51 PM
Last Updated : 30 Aug 2024 07:51 PM

‘ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை’ - ஐகோர்ட் காட்டம்

மதுரை: நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்து அதிகாரிகள் செயல்படுவதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த காஜா மைதீன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், 'மணப்பாறை புத்தாநத்தம் கிராமத்தில் பொதுப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரத்தில் அகற்ற வேண்டும் என கடந்த ஆண்டு நவம்பரில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்க எடுக்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரி இருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமர்வு இன்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள், ''ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. சட்டத்தை நிலைநாட்டுவதாக நீதிபதிகள் உறுதிமொழி எடுப்பதைப் போல, அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில்லை என உறுதிமொழி எடுத்துள்ளனர். அதற்கு இந்த வழக்கு சிறந்த உதாரணம்.

ஆக்கிரமிப்புகளை 12 வாரத்தில் அகற்ற கடந்தாண்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்போது வரை ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக நீதிமன்றத்தை நம்பவைக்க ஊராட்சித் தலைவர் மூலம் நோட்டீஸ் அனுப்புகின்றனர். இவ்வாறு நோட்டீஸ் அனுப்ப ஊராட்சித் தலைவர்களுக்கு அதிகாரம் கிடையாது. வருவாய் துறையினர் தான் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க முடியும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் புத்தாநத்தம் ஊராட்சித் தலைவர் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆகஸ்ட் 9-ல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 3 மாதங்களுக்கு ஒருமுறை நீதிபதிகள் மாறுவதை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பது போல் நீதிமன்றத்தை நம்ப வைக்கும் நடவடிக்கையாகும். இவ்வாறு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில் இருந்து அதிகாரிகள் தப்பிக்கின்றனர்.

எனவே, ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகளை நிரந்தர அமர்வு முன்பாக பட்டியலிட இது சரியான நேரம். இதனால் ஒரு வழக்கு தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதோடு ஒரே மாதிரியான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்ற வசதியாக இருக்கும். வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் மன்னிக்கப்படாது. நீதிமன்றம் இரும்புக்கரம் கொண்டு செயல்படும்.

மணப்பாறை கோட்டாட்சியர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். 7 நாட்களுக்குள்ளாக ஆக்கிரமிப்பாளர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். அதன் பின்னர் கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என உத்தரவிட்டு விசாரணையை அக்.8-க்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x